
சூரிய கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தை தாக்கும் போது சருமத்தின் நிறம் கருமையாகிவிடும் . இதனால் என்றாவது ஒருநாள் ஸ்லீவ் லெஸ், குட்டை கை வைத்த சட்டை போடலாம் என ஆசை இருந்தாலும் வெயிலில் தெரியும் முழங்கை கருமையாகவும், கைகளின் மேற்பகுதி( தோள்பட்டை பகுதி) வெண்மையாகவும் தெரிவதால் போடத் தயங்குவோம். இனி இப்படி தயங்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்படி கருமையான கைகளை வெளுக்க வைக்க கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களைக் கொண்டு மாஸ்க் போட்டால் கருமை நீங்கி இயல்பான நிறம் வருவதுடன் பக்க விளைவுகளும் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஓட்ஸ் ஒரு நேச்சுரல் ஸ்க்ரப்பர். இதனுடன் சிறிது பால் கலந்து மென்மையாக தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட கருமை நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாறு சிறிது, பன்னீர், தேன் மூன்றும் கலந்து கைகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனம், தயிர் இரண்டும் கலந்து கைகளில் பூசி காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட நல்ல மாற்றம் தெரியும்.
பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீர் விட்டு நன்கு கலந்து கைகளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட வெயிலால் ஏற்பட்ட கருமை நிறம் போகும்.
தயிரை நன்கு அடித்து கெட்டி மோராக்கி இரண்டு கைகளிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ கருமை நிறம் மாறுவதுடன் தோலும் எண்ணெய் பசையுடன் வறண்டு போகாமல் இருக்கும்.
வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் கலந்து இரண்டு கைகளிலும் தடவி நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவிவிட நல்ல நிறம் உண்டாகும்.
பயத்த மாவில் சிறிது பன்னீர் கலந்து இரண்டு கைகளிலும் பூசி மசாஜ் செய்து நன்கு காய விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.
பொதுவாகவே தக்காளி சாறு, வெள்ளரி சாறு, பப்பாளிப்பழச்சாறு, தயிர் இவையெல்லாம் தடவி காய்ந்ததும் கழுவ நன்றாக ப்ளீச் மாதிரி செயல்படும்.
எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது சர்க்கரை கலந்து மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கடலை மாவுடன் சிறிது புளித்த தயிர் கலந்து இரண்டு கைகளிலும் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவிவிட கைகளின் கருமை நீங்கி இயல்பான நிறம் வந்துவிடும்.