தினசரி அதிகப்படியான வேலை பளு, மாசு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகளால் நம் சருமம் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் சர்மம் வறண்டு, பொலிவிழந்து, சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன. இவற்றை சரி செய்ய ஹைட்ரா பேஷியல் போன்ற சிகிச்சைகள் இப்போது பிரபலமாகி வருகின்றன. ஆனால், ஸ்பாக்களில் செய்யப்படும் இந்த சிகிச்சைகள் மிகவும் விலை உயர்ந்தவை.
இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்! சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக ஹைட்ரா பேஷியல் எப்படி செய்யலாம் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கிளென்சிங்:
பால் - 2 டேபிள் ஸ்பூன்
கிளிசரின் - 2 டேபிள் ஸ்பூன்
ஸ்க்ரப்:
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
ஃபேஸ் மாஸ்க்:
முட்டை வெள்ளை - 1
தேன் - 1 டீஸ்பூன்
கற்றாழை சாறு - 1 டீஸ்பூன்
மாய்ஸ்சரைசர்:
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
ஹைட்ரா பேஷியல் செய்முறை:
கிளென்சிங்: ஒரு பவுலில் பால் மற்றும் கிளிசரின் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் முகத்தை வெந்நீரில் கழுவி ஈரமான துணியால் துடைத்ததும், காட்டன் துணியை கலவையில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் மெதுவாகத் துடைக்கவும். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்.
ஸ்க்ரப்: ஒரு சிறிய கிண்ணத்தில் சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் இதையும் குளிர்ந்த நீரில் கழுவி துணியால் ஒற்றி எடுக்கவும்.
ஃபேஸ் மாஸ்க்: ஒரு கிண்ணத்தில் முட்டை வெள்ளை கரு, தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே உலர விடுங்கள். இறுதியாக முகத்தை கழுவி நன்கு சுத்தம் செய்யவும்.
மாய்ஸ்சரைஸர்: இயற்கையான மாய்ஸ்சரைஸர் செய்ய தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே விடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு கழுவி காட்டன் துணியால் துடைத்தால், அப்படியே பல பலவென தங்கம் போல ஜொலிக்கும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, பணம் செலவழிக்காமல் நீங்களே வீட்டில் எளிய முறையில் செய்வதால் ஹைட்ரா பேஷியல் செய்ததற்கு நிகரான ரிசல்ட் உங்களுக்கு கொடுக்கும்.