

இன்டீரியர் டிசைனிங்கில் இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். அவை பர்னிச்சர்களும், விளக்குகளும்தான். இருக்கிற இடத்திற்கு ஏற்றார்போல பர்னிச்சர்களை அழகாக அமைக்க வேண்டும். இல்லாவிடில் வீட்டில் பொருட்களை அடைத்துக் வைத்தது போல் பார்க்க சுமாரான லுக்கில் இருக்கும். ஒளிரும் விளக்குகள், வீட்டிற்குள் சிரிக்கும் செடிகள், பளபளக்கும் தரை என வீட்டை அழகாகவும் நேர்த்தியாகவும் மாற்ற, அதிக செலவு இல்லாமலே வீட்டின் உள் அலங்காரத்தை ரசனையுடன் செய்யலாம்.
சுவரின் வண்ணங்கள்:
வீட்டை அழகாக மாற்ற மென்மையான வண்ணங்கள், வெள்ளை, சாம்பல், பீச் போன்ற நடுநிலை வண்ணங்களை தேர்ந்தெடுப்பது வீட்டை விசாலமாவும், நேர்த்தியாகவும் காட்டும். சுவரில் ஒரு பகுதியில் மட்டும் வேறுபட்ட நிறம் கொடுப்பது தனித்துவத்தை கூட்டும். இவை நம் வீட்டிற்கு நவீனத்துவம், அமைதி அல்லது உற்சாகத்தை சேர்க்கும். அறைக்கு ஏற்ற வண்ணம், வாஸ்து மற்றும் நம் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுப்பது முக்கியம்.
விளக்குகள் மற்றும் கண்ணாடிகள்:
சரியான இடத்தில் விளக்குகளைப் பொருத்துவது, அறையை வெளிச்சமாகவும், பெரியதாகவும் காட்டும். கண்ணாடிகள் ஒளியை பிரதிபலித்து இடத்தை பெரிதாகக் காட்டும். எனவே விளக்கு மற்றும் கண்ணாடிகளை அமைப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. இயற்கையான மற்றும் செயற்கை ஒளி வீட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல லைட்டிங்கை அமைப்பது வீட்டை மேலும் அழகூட்டும். எளிமையான, மினிமலிசத்தின் மைல்டான ஒளி மிகவும் அவசியம். அலங்கார விளக்குகள், பெண்டன்ட் விளக்குகள், மேஜை விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவது அறையை அழகு படுத்துவதுடன் நம் மனநிலையையும் மாற்றும்.
துணி வகைகள்:
வீட்டு அலங்காரம் என்பது விலை உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சில புத்திசாலித்தனமான நகர்வுகள் ஒரு இடத்தின் தோற்றத்தையே மாற்றும். புதிய வண்ணங்கள் கொண்ட குஷன்கள், தலையணை உரைகள் (cushions), திரைச்சீலைகள் (curtains), தரை விரிப்புகள் (rugs) போன்றவற்றை மாற்றுவதன் மூலம் அறையின் தோற்றத்தை உடனடியாக மாற்றலாம்.
செடிகள்:
வீட்டிற்குள் செடிகள் அல்லது பூக்களை வைப்பது செலவில்லாமல் புதிய தோற்றத்தையும், புத்துணர்ச்சியையும் தரும். குறைந்த பராமரிப்பு தேவைப்படும் செடிகளை வீட்டிற்குள் அமைக்க வீட்டு அலங்காரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டின் மூலையில் அல்லது ஜன்னல் ஓரத்தில் மணி பிளாண்ட், ஸ்நேக் பிளாண்ட் போன்ற செடிகளை வளர்க்கலாம். இது வீட்டிற்கு புத்துணர்ச்சியையும் இயற்கையான அழகையும் தரும். செடிகள் மற்றும் பூக்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதுடன் காற்றையும் சுத்தப்படுத்தும்.
வீணானதை புதுப்பித்தல்:
பழைய ஃபர்னிச்சர்களை புதுப்பித்து புதிய பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். ஃபர்னிச்சர்கள் அறையின் அளவுக்கு ஏற்ப இருப்பது நல்லது. அத்துடன் கால்கள் கொண்ட பர்னிச்சர்கள் இடத்தைப் பெரியதாக காட்டும். அதேபோல் ஃபர்னிச்சர்களின் அமைப்பை மாற்றி அமைப்பது அறையின் தோற்றத்தையும், பயன்பாட்டையும் மேம்படுத்தும். பழைய சோபாவுக்கு புதிய நிறத்திலான குஷன் கவர்களை மாற்றுவது, தரைக்கு மேட் (mat) போடுவது வீட்டில் உள் அலங்காரத்தை மெருகூட்டும். புதிய பொருட்களை வாங்குவதை விட, இருக்கும் சோபா, மேஜை, கட்டில் போன்றவற்றை வேறு திசைகளில் மாற்றி அமைத்தாலே வீட்டிற்கு ஒரு புதிய தோற்றம் கிடைக்கும்.
சுவர் அலங்காரம்:
வால்பேப்பர் அல்லது ஷேப் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தி சுவரில் அழகியலை சேர்க்கலாம். தற்போது வீட்டின் வெவ்வேறு இடங்களுக்கு பொருந்தக்கூடிய வால்பேப்பர்கள் கிடைக்கின்றன. ஒரு அறையின் எல்லாப் பகுதிகளிலும் வால்பேப்பரை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரு சுவரை தேர்ந்தெடுத்து பிரகாசமான அல்லது அடர்நிறத்தில் அச்சிடப்பட்ட வால்பேப்பர்களால் அலங்கரிக்கலாம். இவை நம் அறையைக் குறைவான பட்ஜெட்டிலேயே ஆடம்பரமாக மாற்ற உதவும்.
கவனத்தை ஈர்க்கும் பொருட்கள்:
உண்மையில் வீட்டு அலங்காரத்துக்கு மதிப்பு கூட்டும் பொருட்கள் என்பது தேவையற்ற பொருட்களை நீக்கினாலே போதுமானது. காலியாக இருக்கும் இடங்களில் சுவர்களில், சுவர்களில் எல்லாம் ஏதாவது பொருளைக்கொண்டு வைத்து நிரப்பவேண்டும் என்ற அவசியம் இல்லை.
வீட்டில் அதிகப்படியான பொருட்கள் இருந்தால் வீடு நெருக்கடியாகத் தெரியும். உபயோகமற்ற பொருட்களை அகற்றிவிட்டு, இடவசதியை அதிகப்படுத்த வீடு விசாலமாகவும் அழகாகவும் தோன்றும். அத்துடன் ஃபிரேம்கள், கவனம் ஈர்க்கும் கலைப் பொருட்கள் போன்றவற்றை வைக்கலாம்.