

வாழ்க்கையில் கடினமாக இருக்கும் செயல்களை நம்மால் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். செய்யதுடிக்கும் சிறு சிறு செயல்களைக்கூட சிறப்பாக செய்யுங்கள். அதுவே பெரிய வெற்றிக்கான அடித்தளமாக மாறும். சின்னச் சின்ன இதழ்கள் சேர்ந்ததுதான் அழகான மலர்.
வாழ்க்கையில் துன்பம் வரும்போது, பொறுமையாக இருங்கள். பொறுமை கடைபிடிக்கும் குணமே, இடர்படும் நேரங்களில் உங்களுடைய மனதின் பாரத்தை குறைத்து, சிந்திக்கும் தன்மையை அதிகப்படுத்துவதுதான்.
வாழ்க்கையில் அவமானங்களை சந்திக்கும்போது, மனதை உறுதியாக வைத்து இருக்க முயற்சி செய்யுங்கள். அப்போது ஏற்ப்படும் அந்த மனஉறுதிதான், இப்படிப்பட்ட நேரம் ஏன் வந்தது என்ற கேள்வி கேட்டு, அதற்கான பதிலையும் கண்டு பிடித்து, அதை கடந்துபோக வைக்கும்.
வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கும்போது, இதுவும் கடந்து போகும். மாற்றம் நமக்கு நிச்சயம் வரும் என்று உள்ளத்தில் நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். மனதில் விடாமுயற்சி தடங்கள் பதிந்து, களமாடும் யுக்திகள் சரியான வழியில் பயணித்து வெற்றி இலக்கை எட்டும்.
வாழ்க்கையில் வறுமையை சந்திக்கும்போது, நிதானம் இழந்து இதுதான் வாழ்க்கையோ என்று எதிர்மறை எண்ணத்தில் துவண்டு போகாதீர்கள். உயர்வான சிந்தனை மூலம் செயல் திறன் கூட்டி, ஒழுக்க நெறிகள் மாறாமல், வெங்காயம்போல், வறுமையை உதிர்த்து, ஒன்றும் இல்லாமல் ஆக்குங்கள்.
மனித வாழ்க்கையில் தாழ்வு நிலை என்று ஒன்றும் இல்லை. மனதின் வலிமை இழக்காமல் இருக்கும் மனிதனுக்கு தாழ்வுநிலை வந்தாலும் மாறுமே உயர்நிலை. அதனால் எந்த இடத்திலும் தன்னை தாழ்மைபடுத்திக்கொள்ள முற்பட வேண்டாம்.
வலிமையான சக்கரங்கள் கொண்ட தேர் கடலில் செலுத்த முடியாது. எந்த கப்பல் போக்குவரத்தும் தரையில் இயக்க முடியாது. அதுபோல், ஒருவர் தமக்குரிய இடத்தில் திறமையை செயல்படுத்தி வெற்றிக் காண்பதே மிகச் சிறப்பு.
வாழ்க்கையில் ஒவ்வொரு விடியலும் அரும்புகள் விரிந்து மலர்வது போல், உங்களுடைய மனஙகளில் ஒளிந்து இருக்கும் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தி உயர்ந்து நில்லுங்கள்.
வாழ்க்கையில் பயம் கலந்த பார்வையை தவிருங்கள். பயம் இருக்கும் இடத்தில், வெற்றிக்கான இலக்கும் தெரியாது. அது தீர்க்கமான பார்வையில் என்றும் செயலும் ஆற்றாது.
வாழ்க்கையில் ஒருவரை அழிக்கும் மிகப் பெரிய ஆயுதம், அவரிடம் இருக்கும் பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் அனுபவ பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.
வாழ்க்கையில் உண்மையை என்றும் போற்றுங்கள். பொய்யான தோற்றம் தவிர்த்து வாழுங்கள். வாழ்க்கையில் எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள். ஆணவம் சொல்லுக்கு விலை போகாதீர்கள்.
வாழும் காலம் முழுவதும் பாசத்தில் திளையுங்கள். வேஷம் போட்டு வாழும் கள்ளம் தவிருங்கள். வாழ்க்கையில் என்றும் அமைதிகாக்கும் மனம் கொள்ளுங்கள். அலப்பறை செய்து அசிங்கப்படாதீர்கள்.
நமக்குள் உதிக்கும் எண்ணம் நன்மை பயக்கும் விதமாக இருக்கட்டும். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கட்டும். வரும் காலங்களில் சிந்தித்து செயல்படும் தன்மை கொள்வோம். அனைத்தும் நம்மை வெற்றிக்கான பாதையை நிச்சயம் வகுத்துக் கொடுக்கும்!