தினசரி தலைக்கு குளிப்பது நல்லதா? ஜாக்கிரதை! 

Is It Good to Take a Head Bath Daily?
Is It Good to Take a Head Bath Daily?

இன்று இந்தப் பதிவில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் தலைப்பைப் பற்றி நாம் ஆராயப்போகிறோம். அதுதான் தலைக்கு குளிப்பது. நீங்கள் வாரத்தில் எத்தனை நாட்கள் தலைக்கு குளிப்பீர்கள்? சிலர் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குளிப்பார்கள். ஆனால் தினசரி தலைக்கு குளித்தால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா? சரி வாருங்கள், இந்தப் பதிவில் தினசரி தலைக்கு குளித்தால் என்ன ஆகும் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம். 

நாம் ஏன் தலைக்குக் குளிக்கிறோம்? 

தினசரி குளிப்பது என்பது நமது சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்றாலும், அதில் தலைக்கு குளிப்பது நமது தனிப்பட்ட சுகாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இது நம் முடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. நாம் தலைமுடியை கழுவும்போது நமது உச்சந்தலையில் சேர்ந்திருக்கும் அழுக்கு, வியர்வை மற்றும் எண்ணெய் ஆகியவை நீங்குகிறது. இது நாம் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. 

எவ்வளவு கால இடைவெளியில் தலைக்கு குளிக்கலாம்?  

நாம் நமது தலை முடியை சுத்தமாக வைத்திருப்பது முக்கியமானது என்றாலும் தினசரி தலைக்கு குளிப்பது அனைவருக்கும் அவசியமில்லை. எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பது சில காரணிகளைப் பொறுத்து மாறுபடும். 

முடி வகை: ஒவ்வொரு நபருக்கு ஒவ்வொரு வகையான முடிகள் இருக்கும். சிலருக்கு எண்ணெய் தன்மையுடைய முடி இருக்கும், சிலருக்கு உலர்ந்த முடி இருக்கும். உங்களுக்கு எண்ணெய் தன்மையுடைய முடி இருந்தால் அதை அடிக்கடி கழுவ வேண்டும். வறண்ட முடி இருந்தால் அதை அடிக்கடி கழுவக் கூடாது. 

உச்சந்தலையின் தன்மை: சிலருக்கு பொடுகு அல்லது அரிப்பு போன்ற உச்சந்தலை பிரச்சனைகள் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு மருத்துவர் அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

செயல்பாட்டு நிலை: அதிகமான வெளிப்புற நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு போன்ற அதிக வியர்வை உண்டாகும் செயல்களில் நீங்கள் ஈடுபட்டால், வியர்வை மற்றும் அழுக்குகளை நீக்க அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லது. இது உங்கள் உச்சந்தலையையும் முடியையும் சுத்தமாக்கி மோசமான வாசனையை தடுக்க உதவும். 

ஆரோக்கியமான தலைக் குளியல் குறிப்புகள்: 

முதலில் உங்களது தலைமுடியின் தன்மை எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். அது அதிக எண்ணெய் பசையாகவும், அழுக்காகவும் தோன்றினால் உடனடியாக தலைக்கு குளிப்பது நல்லது. இது உங்களை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். 

உங்களது முடிவகைக்கு ஏற்ற அதிக ரசாயனங்கள் இல்லாத லேசான ஷாம்புவை பயன்படுத்தவும். கடுமையான ஷாம்புகள் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இருந்து இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சி மற்றும் சேதத்திற்கு வழிவகுக்கும். 

தலைக்கு குளிக்கும்போது உச்சந்தலையை லேசாக மசாஜ் செய்யவும். அதேபோல தலையில் தண்ணீர் ஊற்றி அலசும்போது மசாஜ் செய்தால், தலையில் படிந்துள்ள ஷாம்பு அலசப்படும். இது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
உடலில் அற்புதம் நிகழ்த்தும் மாம்பழம் + பால் காம்பினேஷன்!  
Is It Good to Take a Head Bath Daily?

தலைக்கு குளிக்க வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிக சூடுடைய தண்ணீரை தலையில் ஊற்றினால், உங்கள் முடி வறண்டு உடையக்கூடியதாக மாறலாம். எனவே வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தியே தலைக்கு குளிக்கவும்.

தலைக்கு குளித்ததும், மென்மையான துண்டு பயன்படுத்தி தலையில் உள்ள ஈரத்தை எடுக்கவும். துண்டை தலையில் அழுத்தி வேகமாக தேய்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தும். 

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி முறையாக தலைக்கு குளிப்பதால், தலை மற்றும் முடி ஆரோக்கியத்தை நாம் பராமரிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com