தக்காளி பல நூற்றாண்டுகளாகவே சமையலில் மட்டுமின்றி சருமப் பராமரிப்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதை முகத்திற்குப் பயன்படுத்துவது சரியா? இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? வாருங்கள் இந்தப் பதிவில் உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
தக்காளியின் சரும நன்மைகள்:
தக்காளியில் விட்டமின் சி, ஏ போன்ற சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சரும செல்களை புதிதாக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையாக வைக்க உதவுகின்றன.
தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமியானது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைக் குறைத்து, சருமத்தை பளிச்சென்று மாற்றும். மேலும், இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடி பருக்கள் உண்டாவதைத் தடுக்கின்றன.
தக்காளியில் உள்ள ஆசிட், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தி, அதன் உற்பத்தியைக் குறைக்கிறது. தக்காளியை ஸ்கரப் போல பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமம் மென்மையாகிறது.
எல்லா சரும வகைகளுக்கும் பொருந்துமா?
தக்காளி பெரும்பாலான சரும வகைகளுக்கு ஏற்றது என்றாலும், சென்சிட்டிவ் மிகுந்த சருமம் உள்ளவர்கள் தக்காளியை நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சிலருக்கு தக்காளி அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், அரிப்பு, சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தக்காளி பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும்.
எப்படி பயன்படுத்தலாம்?
தக்காளியை நன்றாக நசுக்கி, தயிர் அல்லது தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகம் பளிச்சென்று மாறிவிடும். அல்லது, தக்காளியைப் பிழிந்து சாறு எடுத்து பருத்தி துணியில் நனைத்து முகத்தில் தடவலாம். மேலும் தக்காளியை சர்க்கரை அல்லது உட்படன் கலந்து முகத்தில் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.
தக்காளி இயற்கையான சருமப் பராமரிப்பு பொருள் என்பதால் பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது. ஆனால், எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் உங்களின் சரும வகைக்கு இது ஒத்து வருமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தக்காளியை தொடர்ந்து பயன்படுத்தும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, அதற்கு ஏற்றவாறான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.