

800 ஆண்டுகள் பழமையான கமர்பந்த்... 2026-ல் மணப்பெண்களின் ஃபேவரைட் அணிகலனாக மாறியது எப்படி?
சேலையின் அழகை எடுத்துக்காட்ட கழுத்தில் நகை, காதில் ஜிமிக்கி, கைகளில் வளையல் என பல அணிகலன்கள் இருந்தாலும், இந்த ஆண்டு மணப்பெண்களின் கவனத்தை ஈர்ப்பது இடுப்பில் அணியும் கமர்பந்த். ஒருகாலத்தில் கோயில் சிற்பங்களில் இடம்பெற்ற இந்த பாரம்பரிய அணிகலன், இன்று பாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேஷன் தேர்வாகவும், மணப் பெண்களின் த்ரோசோவில் முக்கிய இடம்பிடிக்கும் நகையாகவும் மாறியுள்ளது.
கற்களில் பதிந்த வரலாறு
கமர்பந்தின் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து செல்கிறது. 8 முதல் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் சிற்பங்களில் இடுப்பைச் சுற்றி மணிகள் அல்லது அடுக்குகளுடன் கூடிய பட்டைகளை அணிந்த உருவங்களைக் காண முடிகிறது. குறிப்பாக ஹொய்சளர் காலக் கோயில்களின் சிற்பங்களில் இத்தகைய இடுப்பு அணிகலன்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
இது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. உடலின் இடுப்புப் பகுதியை அழகாகக் காட்டுவதோடு, அணிந்திருக்கும் ஆடையின் வடிவத்தையும் ஒழுங்குபடுத்தும் பங்கையும் கமர்பந்த் கொண்டிருந்தது.
எளிய பட்டையிலிருந்து ஆடம்பர நகை வரை
பழங்கால வடிவங்களில் சில மிகவும் எளிமையாக இருந்தன. சிலவற்றில் ஐந்து அடுக்குகள் கொண்ட பட்டை மற்றும் செவ்வக வடிவப் பூட்டு காணப்பட்டது. காலப் போக்கில் மலர் வேலைப்பாடுகள், பல அடுக்கு மணிகள், வண்ணக் கற்கள், அலங்கார மையப்பகுதிகள் என கமர்பந்த் ஒரு பிரம்மாண்டமான நகையாக வளர்ந்தது.
கமர்பந்தின் மற்றொரு சுவாரஸ்யம், இது பெண்களுக்கு மட்டுமே உரிய அணிகலன் அல்ல என்பதுதான். இந்தியக் கலை மற்றும் சிற்ப மரபுகளில் ஆண்கள், பெண்கள், நடனக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களிலும் இடுப்பு அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், கமர்பந்த் ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்கான ஃபேஷன் என்பதைத் தாண்டி, இந்திய அலங்காரக் கலையின் பொதுவான பகுதியாக இருந்திருப்பது தெரிகிறது.
ஒரே அணிகலன்... பல பிராந்திய வடிவங்கள்
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் கமர்பந்த் தனித்தனி பெயர்களிலும் வடிவங்களிலும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டியாணம், கேரளத்தில் வட்டணம், ராஜஸ்தானில் கர்தானி போன்ற வடிவங்கள் இதன் பிராந்திய மாற்றங்களாகக் கருதப்படுகின்றன.
வேதகால இலக்கியங்களிலும் இடுப்பு அணிகலன்கள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. சோழர்கள், ஹொய்சளர்கள், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் நாயக்கர் காலங்களில் தங்க நகைக்கலை வளர்ந்தபோது, கமர்பந்தும் தனித்துவமான கைவினைப் பாரம்பரியமாக உருவெடுத்தது.
பாலிவுட்டின் புதிய வரவேற்பு
2026-ல் கமர்பந்தின் மீதான ஆர்வத்தை பிரபலங்களின் ஃபேஷன் தேர்வுகள் மேலும் அதிகரித்துள்ளன.
சுஹானா கான், மனீஷ் மல்ஹோத்ராவின் தீபாவளி விருந்தில் அணிந்த ஊதா நிற சேலையுடன் வைரங்கள் பதிக்கப்பட்ட மெட்டாலிக் இடுப்புப்பட்டையைத் தேர்வு செய்தார். கழுத்தில் அதிக நகைகள் இல்லாமல், இடுப்புப் பட்டையையே தனது தோற்றத்தின் முக்கிய அம்சமாக மாற்றினார்.
பிரியங்கா சோப்ரா ஜோனஸ், அனாமிகா கண்ணாவின் ஐவரி நிற லெஹங்கா-சேலை அணிந்து பாரம்பரியமும் நவீனமும் கலந்த தோற்றத்தை உருவாக்கினார். இதுபோன்ற கட்டுப்படுத்தப்பட்ட அலங்காரத்துக்கு கமர்பந்த் ஒரு அழகான நிறைவாக அமைகிறது.
குஷி கபூர், காஞ்சிவரம் பட்டு சேலை, ஜரிகை மற்றும் ஜர்தோசி வேலைப்பாடுகளுடன் தென்னிந்திய பாரம்பரியத்தை முன்னிறுத்தினார். இதுபோன்ற தோற்றத்துடன் கமர்பந்த் இணைவது, பழைய கோயில் நகை மரபை நவீன ஃபேஷனுடன் இணைக்கிறது.
மணப்பெண்களின் கவனத்தை ஈர்த்த கமர்பந்த்
கமர்பந்த் மணப்பெண் அலங்காரத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றதற்கு ராஷ்மிகா மந்தனாவின் திருமணத் தோற்றமும் குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டாவுடனான திருமணத்தில், சுமார் பத்து மாதங்கள் தயாரிக்கப்பட்ட அவரது பிரம்மாண்டமான தங்க நகைத் தொகுப்பில் கமர்பந்தும் இடம்பெற்றது.
ஆரஞ்சு-தங்க பனாரசி பட்டு சேலையில் அணிந்த கமர்பந்த், அவரது கனமான திருமண நகைகளுடன் இணைந்து முழுத் தோற்றத்துக்கும் கம்பீரத்தை அளித்தது. பின்னர் சிவப்பு மைசூர் பட்டு சேலையிலும் இடுப்பு அணிகலன் தொடர்ந்தது.
தென்னிந்திய மணப்பெண் அலங்காரத்தில் இது அழகுக்காக மட்டுமல்ல; கனமான பட்டு சேலையின் மடிப்புகளைச் சரியாக அமைக்கவும் உதவுகிறது.
மணப்பெண்ணின் த்ரோசோவில் சேர்க்கக்கூடிய 5 கமர்பந்த் வடிவங்கள்
ஸ்டேட்மென்ட் ப்ளூம்: பச்சை, சிவப்பு, இளஞ்சிவப்பு கற்களுடன் கூடிய அகலமான குந்தன் கமர்பந்த். பிரம்மாண்டமான சேலைக்கு ஏற்றது.
பிரைட்ஸ் அண்டர்ஸ்டடி: முத்துத் தொங்கல்கள் மற்றும் பாரம்பரிய மணிகளுடன் கூடிய தங்க நிற வடிவம். சிவப்பு, ஐவரி, தங்க நிற சேலைகளுடன் பொருந்தும்.
எவரிடே எலிகன்ட்: குந்தன் கற்கள் மற்றும் முத்துத் தொங்கல்களுடன் கூடிய சரிசெய்யக்கூடிய வடிவம். சங்கேத் முதல் குடும்ப நிகழ்வுகள் வரை அணியலாம்.
ஹெர்லூம் லுக்: ஜடாவ் கற்கள் மற்றும் பல வண்ண அலங்காரங்களுடன் கூடிய கனமான வடிவம். பாரம்பரிய மணப்பெண் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது.
குயட் ஃபினிஷர்: மெல்லிய குந்தன் மற்றும் முத்துக் குழுக்களுடன் கூடிய எளிமையான கமர்பந்த். அதிக நகைகள் அணிய விரும்பாதவர்களுக்கு சிறந்த தேர்வு.
பழமை மாறவில்லை... பார்வைதான் மாறியுள்ளது!
கோயில் சிற்பங்களில் தொடங்கிய கமர்பந்தின் பயணம் இன்று திருமண மேடைகளையும் ஃபேஷன் நிகழ்வுகளையும் வந்தடைந்திருக்கிறது. 800 ஆண்டு களுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்த அணிகலன், ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு தனது வடிவத்தை மாற்றிக்கொண்டாலும், இடுப்புக்கு தனி அழகு சேர்க்கும் அதன் அடிப்படை நோக்கம் மட்டும் மாறவில்லை.
2026-ல் கமர்பந்த் ஒரு டிரெண்ட் மட்டுமல்ல... பாரம்பரியத்தை நவீனமாக அணியும் மணப்பெண்களின் புதிய அடையாளம்!
இந்தத் தொகுப்பின் மூலம் உங்கள் திருமண ஆடைக்கு ஏற்ற சிறந்த கமர்பந்த் மாடல்கள் வடிவங்களை நீங்கள் மிக எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் பாரம்பரியத் தோற்றத்தை நவீன மிடுக்கோடு வெளிப்படுத்தி, திருமண நாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கம்பீரமான தோற்றத்தைப் பெறலாம்.