இன்றைய காலத்தில் முடி உதிர்வுப் பிரச்சனையை சந்திக்காத நபர்களே கிடையாது. மரபணு, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை முடி உதிர்வுக்கு காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பிரச்சனைக்கு பலவிதமான தீர்வுகள் இருந்தாலும் மினாக்சிடில் தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடி உதிர்வைக் குறைக்க உதவும். இந்தப் பதிவில் மினாக்சிடில் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
Minoxidil எவ்வாறு செயல்படுகிறது?
மினாக்சிடில் முதன் முதலில் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மருந்தைப் பயன்படுத்திய சில நபர்களுக்கு முடி வளர்ச்சி அதிகரித்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இது தலைமுடி வளர்ச்சிக்கான மருந்தாக மாற்றப்பட்டது. மினாக்சிடில் முடி வேர்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியின் காலத்தை நீட்டித்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இது ஆண்ட்ரோஜன்களின் தாக்கத்தைக் குறைத்து முடி உதிர்வை ஏற்படுத்தும் செயல்முறையைத் தடுக்கிறது.
யார் பயன்படுத்தலாம்?
ஆண்களில் ஆண்ட்ரோஜினிக் அலோபிசியா அல்லது மேல் பால்ட்னெஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு மினாக்சிடில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல பெண்களுக்கு மெல்லிய தலை முடி பாதிப்பு இருந்தால் மினாக்சிடில் பயன்படுத்தலாம்.
யார் பயன்படுத்தக்கூடாது?
மினாக்சிடில் பயன்படுத்தினால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால் அத்தகைய நபர்கள் இதை பயன்படுத்தக்கூடாது. தலைப்பகுதியில் தோல் நோய்கள் உள்ளவர்கள் மினாக்சிடில் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மினாக்சிடலை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் மினாக்சிடில் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
சாதாரண முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு மினாக்சிடில் பயன்படுத்துவது யாருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. உங்களுக்கு தீவிர முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மட்டும் தகுந்த மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் இதைப் பயன்படுத்துங்கள். நீங்களாகவே வாங்கி பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இதற்கு சில பக்கவிளைவுகள் உள்ளன.
மினாக்சிடலின் பக்க விளைவுகள்:
மினாக்சிடில் பயன்படுத்துவதால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படலாம். அரிப்பு எரிச்சல், முகம் கழுத்து போன்ற பகுதிகளில் முடி வளர்ச்சி அதிகரிப்பு, ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை இவை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகள் தற்காலிகமானவை என்றாலும், மினாக்சிடில் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மினாக்சிடில் தலை முடி உதிர்வுக்கு சிகிச்சை அளிக்க ஒரு பயனுள்ள மருந்தாக இருந்தாலும், இது அனைவருக்கும் பொருந்தாது. இதை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது முக்கியம். அவர்கள் உங்கள் நிலைமையை மதிப்பீடு செய்து மினாக்சிடில் உங்களுக்கு ஏற்றதா என்பதைத் தீர்மானிப்பார்கள்.