டிராகன் ஃபுரூட் என்ற பழத்தைத் தரும் கற்றாழை வகையை சேர்ந்த தாவரங்கள் முதலில் தென் அமெரிக்காவின் வெப்ப நிலைப் பிரதேசங்களில் வளர ஆரம்பித்து, பிறகு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற மற்ற இடங்களிலும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இவை நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சீரான செரிமானத்துக்கும், மலச் சிக்கலை நீக்கவும், எடையைப் பராமரிக்கவும், இதய ஆரோக்கியம் காக்கவும், உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்கவும் என பலவிதமான செயல்பாடுகளுக்கும் சிறந்த முறையில் உதவி புரிபவை. சிலர் இப்பழத்தை உண்டதினால் சில வகை அசௌகரியங்களை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. அப்படியான பக்கவிளைவுகள் என்ன? அவை எதனால் வருபவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. டிராகன் ஃபுரூட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை - குடல் சம்பந்தமான, வயிறு வீக்கம், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட அதிகளவு பழத்திலுள்ள அதிகளவு நார்ச் சத்துக்களேயாகும்.
2. இப்பழத்தை அதிகம் சாப்பிட்டு குடலில் அதிகளவு நார்ச்சத்து சேரும்போது அது லேசான லாக்சேடிவ் (Laxative) குணம் பெற்று அதனால் மலம் இளகி வயிற்றுப் போக்கு உண்டாகவும் வாய்ப்பாகும்.
3. பொதுவாக, ஃபுட் அல்ர்ஜி உள்ளவர்கள் டிராகன் பழம் சாப்பிடும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். ஏனெனில், அலர்ஜி உண்டானால் சருமத்தில் எரிச்சல், தடிப்பு, படை நோய் அறிகுறி போன்றவை தோன்றக் கூடும்.
4. பழங்களிலும் காய்கறிகளிலும் இயற்கையாகவே இருக்கக் கூடிய ஆக்ஸலேட்ஸ் என்றொரு கூட்டுப்பொருள் டிராகன் பழத்திலும் உண்டு. இதை, ‘ஆன்டி நியூட்ரியன்ட்’ என்று கூறுவதுண்டு. ஏனென்றால், இது கால்சியம் மற்றும் பிற மினரல்களையும் ஒன்றிணையச் செய்து அவை உடலுக்குள் உறிஞ்சப்படும் அளவை குறையச் செய்யும். இதேபோல் கிட்னியிலுள்ள மினரல்களை இணைக்கும் போது கிட்னியில் கல் உருவாகும்.
5. உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இப்பழத்தை உட்கொண்டால் அது வேறு மாதிரியான வினையாற்றக் கூடும். எனவே, அவர்கள் இதை உண்பதற்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நன்மை தரும்.
6. ஃபுட் அலர்ஜி உள்ள கர்ப்பிணிப் பெண்கள், பக்க விளைவுகளைத் தடுக்க, இப்பழத்தை உட்கொள்ளும் முன் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.
டிராகன் ஃபுரூட் சமீப காலமாக உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதை லோட்டஸ் என்று அர்த்தம் தரும், 'கமலம்' என்ற பெயரால் அழைக்கின்றனர்.