
பெரும்பாலான பெண்கள் முக அழகுக்கு கொடுக்கும் கவனிப்பை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. ஏனெனில் முகத்திற்கு மட்டும் அழகு இருந்தால் போதும் என்று அலட்சியமாய் உள்ளனர். ஆனால் கால் பாதங்களை சுத்தமாக வைத்திருக்கும் பெண்கள்தான் எல்லா விஷயத்திலும் அக்கறை கொண்டவராக இருப்பார்கள் என்பது நம் முன்னோர் பலர் கண்ட உண்மை.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போது பாதங்களை சுத்தமாக கழுவிவிட வேண்டும். பாதத்திலும், சுற்றுப்புறத்திலும் ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டே வீட்டுக்குள் செல்லவேண்டும். உணவு சாப்பிடும் முன்பு கைகளை கழுவுவதுபோல் கால்களையும் கழுவவேண்டும்.
தினமும் குளிக்கும்போது பாதத்தையும், விரல் இடுக்கையும் சோப்பு போட்டு கழுவி பிறகு ஈரம் இல்லாத துண்டால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மாயிஸ்சரைசிங் லோஷன் எடுத்து கால் பாதங்களிலும், கணுக்காலிலும் தேய்த்து ஐந்து நிமிடம் வைத்திருந்து விட்டு, பிறகு துடைத்து விடவேண்டும். விரல்களுக் கிடையில் பவுடர் தூவி ஈரத்தன்மையைப் போக்கலாம்.
சில பெண்களுக்கு அடிக்கடி கால் பாதங்களில் தூசிகளும், மாசுகளும் நிறைந்து அழுக்காகக் காணப்படும். அவ்வாறானவர்கள் காலையில் குளித்து முடிந்த உடன் பாதங்களை ஈரத்துணியால் நன்கு துடைத்து விட்டு காய்ந்தவுடன் எண்ணை (தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணை) தடவலாம். அல்லது ஏதாவதொரு மாயிஸ்சரைசிங் கிரீமை தடவி சிறிது நேரம் கழித்த பின் துடைத்துவிட்டு இரண்டு சொட்டு கிளிசரின் விட்டு வந்தால் பாதங்கள் பளபளப்பாகவும், மிருதுத் தன்மை வாய்ந்ததாகவும், அழுக்கு படியாமலும் இருக்கும்
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் பாதியளவுக்கு மிதமான சூடுள்ள நீரையும், இன்னொன்றில் பாதியளவுக்கு குளிர்ந்த நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
முதலில் ஐந்து நிமிடம் சுடுநீரில் கால்களை வைத்துவிட்டு அடுத்து 5நிமிடம் குளிர்ந்த நீரில் கால்களை வையுங்கள். இவ்வாறு செய்தால் கால் பாதத்தில் ஏற்பட்ட சோர்வு நீங்கும். பிறகு கால் பாதத்தையும், விரலையும் துடைத்து ஈரத்தைப் போக்க வேண்டும். பின்னர் இரண்டு தேக்கரண்டி கிளிசரின் 2 தேக்கரண்டி பன்னீர், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் கலந்து கால் பாதத்தில் தேய்த்துவிட்டு படுத்துவிடுங்கள். இப்படி செய்தால் பாதங்களுக்கு மிருதுத்தன்மையும் வசீகரமும் ஏற்படும். மேலும் இரவில் நன்றாகத் தூக்கமும் வரும்.
பாதங்களில் ஏதேனும் புண்ணோ, காயமோ ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடவேண்டும். கால் பாதங்களை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பவர்களுக்கு ஈரப்பதம் காரணமாக சொறி, சேற்று புண் போன்றவை ஏற்படக்கூடும். ஆதலால் விரலின் இடுக்குகளில் ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
கால் பெருவிரல் நகத்தின் மேல் பகுதியிலும், உள்ளங்கால்களிலும் தேங்காய் எண்ணை தேய்த்துவிட்டு உறங்குவது கால்களில் அல்லது பாதங்களில் ஏற்படும் சோர்வை போக்கிவிடும். மேலும் இவ்வாறு செய்வது கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியையும் பொலிவையும் ஏற்படுத்தும்.
புதிதாக செருப்பு அணியும்போது செருப்பு கடித்தால் அந்த இடத்தில் பூண்டு அல்லது வெங்காயத்தை அரைத்து தேய்த்தால் குணம் அடையும். பொதுவாக கால்களால் கடினமான பொருள்களை நகர்த்துதல் கூடாது அவ்வாறு செய்வதால் கால்களில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.
வீட்டை விட்டு வெளிவரும்போது கட்டாயம் செருப்பு அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லையெனில் கால்களின் மூலம் பல தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. தையல் இயந்திரம் பயன்படுத்துபவர்கள் தினமும் உறங்கச்செல்லும் முன் கால்களில் தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணை தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதால் கால்வலி, மூட்டு வலியில்லாமல் நம் கால்களை பாதுகாக்கலாம்.