
யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒருவரின் எண்ணங்கள், நடத்தைகள் மற்றும் குணாதிசயங்களை மாற்றுவது என்பது மிகவும் கடினம். ஒருவரை மாற்ற முயற்சிப்பதற்கு பதில் அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுடன் நல்ல முறையில் பழக முயற்சி செய்தாலே போதும். அவரவர்கள் இருக்கிறபடி இருக்கட்டும். யாரும் மாறமாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது நம் வேலையும் இல்லை. நம்முடைய நேரமும் சக்தியும்தான் விரயமாகும்.
மற்றவர்களின் மனதை மாற்ற நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை யோசித்து பார்த்தாலே தெரியும். விற்பனைக்கூடங்கள் முதல் இரவு உணவிற்கு நாம் என்ன சாப்பிட போகிறோம், குழந்தைகள் எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும், அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பது வரை மற்றவர்களுடைய கருத்துக்களை வடிவமைப்பதில் நாம் நிறைய நேரத்தை மட்டுமல்ல நம்முடைய முயற்சியையும் செலவிடுகிறோம். யாருடைய மனதையும் நம்மால் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் நாம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.
ஒருவரின் மனதையோ அல்லது அவர்களின் எண்ணத்தையோ மாற்ற வேண்டுமென்றால் முதலில் அந்த விஷயத்துடனான அவர்களின் விருப்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தால் நாம் எவ்வளவு வாதங்கள் செய்தாலும் அவர்கள் அதில் மயங்கிப் போக வாய்ப்பில்லை. அந்த இடத்தில் உணர்ச்சிபூர்வமான வாதங்கள் கூட எடுபடாது. ஒருவருக்கு நாம் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயத்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் அது அவர்களுக்கு சலிப்பைதான் ஏற்படுத்தும்.
ஒருவரின் மனதை நாம் ஒருபோதும் மாற்றமுடியாது வேண்டுமானால் பச்சாதாபத்தை ஏற்படுத்தி மாற்ற முயற்சிக்கலாம். இது நீண்ட நாட்களுக்கு உதவும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை இருந்து நாம் சொல்வதையும் நம்புவதாக இருந்தால் ஒருவேளை அவர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நாம் நிறைய மெனக்கிட வேண்டும். எனவே யாரையும் மாற்ற வேண்டிய அவசியம் நமக்கில்லை.
ஒருவரை வற்புறுத்தியோ, நச்சரித்தோ, பயமுறுத்தியோ மாற்ற முயற்சிப்பது வீண் வேலை. ஒருவர் தானாகவே தன்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தாலொழிய யாரையும் வற்புறுத்தி எதையும் சாதிக்க முடியாது. யாருமே 100 சதவிகிதம் சரியானவர்கள் கிடையாது.
சிலரின் செயல்கள் எரிச்சலூட்டும்படி இருந்தால் மனம் திறந்து அவர்களிடம் நாம் அவர்களின் செயலால் காயப்படுகிறோம் என்பதை சொல்லி புரியவைக்கலாம். புரிந்துகொண்டு தங்களை மாற்றிக்கொண்டால் அவர்களுடன் தொடர்ந்து நட்பில் இருக்கலாம். அது முடியாத பட்சத்தில் அவர்களை விமர்சிப்பதோ, குறை கூறுவதோ பிரச்னைக்கு தீர்வாகாது. அவர்களிடமிருந்து விலகி, ஒதுங்கி விடுவதே நல்லது.
யாரையும் மாற்ற முயற்சிப்பது நம் வேலை இல்லை. அதற்கு பதில் பிறரை புரிந்து கொள்வதும், அவர்களை நிறை குறையுடன் அப்படியே ஏற்றுக் கொள்வதும், அதிக எதிர்பார்ப்பில்லாமல் பழகுவதும் அவர்களுடன் நல்ல முறையில் பழகி சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதும் அவசியம். செய்வோமா?