பெண்களே! மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க இதைப் பண்ணுங்க!
சில பெண்களுக்கு உதட்டின் மேல்பகுதியில் சிறிதளவு முடி வளர்ந்திருக்கும். இது அவர்களின் அழகைக் கெடுப்பதோடு, சமூகத்தின் பார்வையில் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்போது காண்போம்.
இன்றைய காலத்து இளைய தலைமுறையினர் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதற்காக சந்தையில் கிடைக்கும் பலவிதமான அழகு சாதனப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் பலரும் மேக்கப் செய்வதைப் பார்த்தால், அதற்காகவே மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்குகிறார்கள் என்று தோன்றும். அழகை ரசிப்பதும், அழகாய் காட்டிக் கொள்வதும் இயல்பு தான். ஆனால், சில பெண்களுக்கு மேல் உதட்டின் மேற்புறம் சிறிய அளவில் முடிகள் இருக்கும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கிறது.
எல்லோருக்கும் உதட்டின் மேற்புறத்தில் முடி இருப்பதில்லை. அரிதாக ஒருசில பெண்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இயற்கையாகவே இருக்கிறது. இதிலிருந்து வெளிவர நினைக்கும் பெண்கள், எதனையும் எதிர்கொள்ளும் திறனை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், உதட்டின் மேல் இருக்கும் முடியை எப்படி நீக்குவது என்பதையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.
இயற்கை வைத்தியம்: கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் தூள் அல்லது சர்க்கரை மெழுகைப் பயன்படுத்தி மிக எளிதாக உதட்டின் மேலிருக்கும் முடியை நீக்கலாம். தொடர்ந்து மஞ்சளில் தண்ணீர் ஊற்றி இந்தக் கலவையை மேல் உதட்டில் தடவி வந்தால், அங்குள்ள முடிகள் அனைத்தும் வலுவிழந்து அதன் வளர்ச்சி தடைபடும். இதேபோல் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்க்கரை மெழுகுகள் முகத்தில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு உதவும்.
கிரீம்கள்: தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை அகற்ற சந்தையில் விற்பனையாகும் ஒருசில கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இருக்கும் ரசாயனங்கள் முடியின் புரத அமைப்பை உடைத்து சுத்தம் செய்கின்றன. முக்கியமாக இதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி பின்பற்ற வேண்டும். ஆனால், இதனைப் பயன்படுத்தும் போது சிலருக்கு எரிச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக உபயோகிக்க வேண்டும்.
டிரிம்மிங்: ஒரு டிரிம்மர் அல்லது சிறிய கத்தரிக்கோலைப் பயன்படுத்தி மேல் உதட்டில் இருக்கும் முடியை மெதுவாக டிரிம் செய்யலாம். மற்ற பெண்களைப் போல் இயற்கையான அழகைப் பெறுவதற்கு இது உதவும். ஆனால் ஷேவிங் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். முகத்தில் பிளேடு பட்டால், அது இனிவரும் நாட்களில் முகத்தின் அழகைக் கெடுக்கக் கூடியதாக மாறி விடும்.
மெழுகு கீற்றுகள்: பெண்களின் முகத்தில் இருக்கும் முடிகளை நீக்குவதற்கு மெழுகு கீற்றுகள் ஒரு பயனுள்ள வழியாக இருக்கிறது. ஒரு கையில் வேக்சிங் பட்டையை வைத்துக் கொண்டு மேல் உதட்டில் தடவி, முடி வளர்ச்சிக்கு நேரெதிர் திசையில் விரைவாக இழுத்தால் அப்பகுதியில் இருக்கும் முடிகள் நீங்கும். டிரிம்மிங் மூலமாக நீங்கள் அடையும் பலனை விடவும் இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.