
மெனிக்யூர் என்பது:
மெனிக்யூர் என்பது கை நகங்கள் மற்றும் கைகளை அழகு படுத்துவதாகும். நகங்களை வெட்டி சீர்படுத்துதல், நகங்களை சுத்தம் செய்து அழகான வடிவம் கொடுத்தல் மற்றும் கைகளுக்கு மசாஜ் செய்து இறந்த செல்களை நீக்குதல் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலாகும். (Manicure in home) மெனிக்யூர் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தமாக சோப்பு கொண்டு கழுவவும்.
பின்பு நகங்களில் இருக்கும் பழைய நெயில் பாலிஷ்களை நிதானமாக நீக்கவும். இதற்கு தரமான நெயில் பாலிஷ் ரிமூவரை உபயோகப்படுத்த நகங்கள் பாதிப்படையாது. நெயில் பாலிஷை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் மூவரைக் கொண்டு மென்மையாக தடவி காட்டன் கொண்டு அகற்றிவிடவும்.
நகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க:
நகங்களை விருப்பமான வடிவில் வெட்டிக்கொள்ளவும். நகத்தின் விளிம்புகளில் ஃபைலரை (nail filer) மென்மையாக தேய்த்து நகங்களை ஸ்மூத்தாக்கவும். ஃபைலரை ஒரே திசையில் ஃபைல் செய்ய வேண்டும். எதிரெதிர் திசையில் முன்னும் பின்னுமாக தேய்த்தால் நகத்திற்கு பாதிப்பு உண்டாகும். எனவே ஒரே திசையில் செய்யவும்.
நகங்களுக்கு மசாஜ்:
நகங்களை வெட்டிய பிறகு ஆலிவ் ஆயில் அல்லது ஏதாவது ஒரு எண்ணையைத் தடவி சிறிது மசாஜ் செய்ய நகத்திற்கும், கைகளுக்கும் ஈரப்பதத்தை கொடுக்கும். தேங்காய் எண்ணெயுடன் எஸன்ஷியல் ஆயில் சேர்த்தும் மசாஜ் செய்யலாம். இதற்கு வீட்டில் இருக்கும் அரோமேட்டிக் எண்ணெயைகளைக்கூட பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு அதில் சிறிதளவு எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கைகளை பத்து நிமிடங்கள் ஊறவிடவும். தேன் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படும். எலுமிச்சைசாறு நகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும். கைகள் மென்மையான பிறகு நீரிலிருந்து எடுத்து ஈரம் போகத் துடைத்துவிட்டு சிறிதளவு ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி விடவும்.
ஸ்கிரப் செய்வது:
நகங்களை ஸ்கிரப் செய்ய எலுமிச்சை சாறுடன் சிறிது சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் கலந்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதை விரல்கள் மற்றும் கைகளில் தடவி மெதுவாக தேய்க்கவும். இது இறந்த செல்களை நீக்க உதவும். ஆலிவ் எண்ணெய் விரல்களுக்கும், கைகளுக்கும் ஈரப்பதத்தை அளிக்கும். நக கண்களில் இதனை சிறிது வைத்து மெதுவாக சில நிமிடங்கள் நகத்தை அதிக அழுத்தமின்றி வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.
இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனால் நாம் புத்துணர்வாக உணரமுடியும். விரல்களையும், கைகளையும் நன்கு தேய்த்ததும் வெதுவெதுப்பான நீரில் கையைக் கழுவி மென்மையான துணியால் துடைக்கவும்.
விருப்பமான வடிவில் வெட்டுவது:
இறந்த செல்களை நீக்கிய பிறகு மாய்ஸ்சரைசர் அல்லது நெயில் கிரீம் பயன்படுத்த விரல்களும், கைகளும் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும். நகங்களை விருப்பமான வடிவிற்கு வெட்டும்போது வட்டம் அல்லது சதுர வடிவில் வெட்டுவோம். சதுர வடிவத்தில் நகங்களை வெட்டுவதால் அவை அதிக அழகை பெறுவதுடன் எளிதில் உடையாமலும் இருக்கும்.
அழகுபடுத்த:
கடைசியாக நகங்களை விருப்பமான நெயில் பாலிஷ் கொண்டு அழகு படுத்தவும். மெனிக்யூர் செய்வதால் விரல்கள் மிருதுவாவதுடன், எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் சுருக்கங்கள் நீங்கி அழகாக காணப்படும்.
நகங்களை அடிக்கடி உடையாமலும், வலுவிழக்காமலும் பாதுகாக்க மெனிக்யூர் சிறந்தது. நகக்கண்களில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் பாக்டீரியாக்கள் போன்ற தொற்று இல்லாமல் இருக்க உதவும். அழகையும் ஆரோக்கியத்தையும் தரும் இதனை செலவின்றி வீட்டிலேயே செய்யலாம்.