
ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போதைய திருமணங்களில் உடைகளுக்கென்று தனி கவனம் செலுத்தப்படுகிறது. திருமண உடைகளுக்கென லட்சக்கணக்கில் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. அதிலும் குறிப்பாக மணப்பெண்ணின் உடைகள் காண்போரின் கண்களை கட்டிப்போட செய்கின்றன. முக்கியமாக மணப்பெண் புடவைகளுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமான பிரத்யேகமான டிசைன்களில் பிளவுஸ்களும் வடிவமைக்கப்படுகின்றன.
கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் ஜாக்கெட்களுக்கென்று (பிளவுஸ்) தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள். விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற் போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம்.
முன்பு குறிப்பிட்ட சில கழுத்து வகைகள் (நெக்) மட்டுமே பிரபலமாக இருந்தன. பலர், தங்களுக்கு பொருத்தமான நெக் வகைகளை மட்டுமே, எல்லா கொண்டாட்டங்களிலும் தைத்து அணிந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதிது புதிதான நெக் வகைகளையும், பெண்கள் அணிந்து பார்க்க ஆசைப்படுவதால், நிறைய நெக் வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன. கூடவே சிலீவ் வகைகள் ஏராளமாக வந்துகொண்டே இருக்கின்றன.
சமீப காலமாக புடவைக்கு செலவழிப்பது போல, பிளவுஸ் விஷயத்திலும் பாரபட்சமில்லாமல் செலவழிக்கிறார்கள் நவீன கால இளம் பெண்கள். தற்போது சிறப்பான வேலைப்பாடுகளுடன் பிளவுஸ் அணிகிறார்கள்.
பெண்கள் பொதுவாக தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதன் காரணமாக, மற்றவர்களிடத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி, சிறப்பாக காட்சிப்படுத்திக் கொள்வதற்காகவே, பிளவுஸ் வகைகளை புதுப்புது வேலைபாடுகளில் அலங்கரிக்கிறார்கள். சிலர் சேலைக்கு நிகரான செலவில், பிளவுஸையும் அலங்கரித்து அணிகிறார்கள்.
ஆரி வேலைபாடுகள், பிளவுஸை நேர்த்தியாக்கும். திருமணங்கள், விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்கள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் வகைகளையே அதிகம் விரும்புகிறார்கள். ஆரி வேலைப்பாடுகளில், மெஷின் வேலைப்பாடு மற்றும் கைகளில் செய்யப்படும் வேலைப்பாடு என மதிப்பும், அதன் தரமும் வேறுபடும். இவை கூடவே, பெயிண்டிங் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் இப்போது பிளவுஸ்களை அலங்கரிக்கின்றன.
அதிக வேலைப்பாடுடைய பிளவுஸ்களுக்கு பிளைன் கான்ட்ராஸ்ட் கலர் சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம். இன்றைய நவீன பெண்கள் பிளவுஸ்களுக்கென்று ஏகப்பட்ட விலையையும் தனிக் கவனத்தை கொடுத்து வருகிறார்கள்.