அழகான நகங்களுக்கு சிம்பிள் நெயில் ஆர்ட் டிப்ஸ்!
அழகு சம்மந்தமாக எந்த புதிய விஷயம் சந்தைக்கு வந்தாலும், அதை உடனே முயற்சித்து பார்ப்பதில் பெண்களுக்கு எப்போதுமே அலாதி பிரியமுண்டு.
அப்படி புதிதாக வந்திருக்கும் டிரெண்ட்தான், நெயில் ஆர்ட்டாகும். முன்பெல்லாம் கையையும் விரல்களையும் அழகுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பெண்கள் செய்யும் அதிகபட்சமானது என்றால் மருதாணி வைப்பது மட்டும்தான். பிறகு காலம் மாற மாற நெயில் பாலிஷ் வந்தது. இப்போது டெக்னாலஜி வளர்ச்சியில், நெயில் ஆர்ட், செயற்கை நகங்கள் போன்றவை சந்தையில் வந்து கலக்கி கொண்டிருக்கிறது. (Nail Art tips)
பெண்களுக்கு எப்போதுமே பெரிதாக நகம் வளர்க்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆனால் சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும் அவர்களுக்கெல்லாம் நகம் வளர்ப்பது என்பது பகல் கனவாகவேயிருந்தது. இனி அந்த பிரச்சனை கிடையாது என்ற செய்தி பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நகம் என்பது நகத்தின் மீது செயற்கையாக அழகுக்காக ஒட்டக் கூடிய நகமாகும். இது பெரும்பாலும் பிளேஸ்டிக்கால் ஆனதேயாகும். அதற்கென செய்யப்பட்ட பசை மற்றும் செயற்கை நகங்கள் அதன் தரத்திற்கு ஏற்ற விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதை வாங்கி நம் நகத்தின் மீது பசையை தடவி அந்த செயற்கை நகங்களை ஒட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
அக்ரிலிக் நகங்கள் அக்ரிலிக் கண்ணாடியால் ஆனது. அக்ரிலிக் நகங்கள் 21 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியவையாகும். எனினும் இது இயற்கையான நகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று தடை செய்து விட்டனர்.
ஜெல் நகங்கள் நெயில் பாலிஷ் போல பயன்படுத்தக் கூடியதாகும். புறஊதாக்கதிரை பயன்படுத்தி இதை இறுக செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது விலை சற்று கூடுதலேயாகும்.
நகங்களின் மீது அழகாக வரையப்படுவதற்கு பெயர் தான் நெயில் ஆர்ட் ஆகும். இது கால் விரல் நகங்களிலும், கை விரல் நகங்களிலும் பெடிக்கூர் மற்றும் மெனிக்கூர் செய்த பிறகு செய்யப்படும் முறையாகும்.
இது போன்று நெயில் ஆர்ட் போட்டுக்கொள்வது உற்சாகத்தை கொடுக்கும், அழகான விரல்களை பராமரிக்கலாம். முதலில் விரல்களை நன்றாக சுத்தப்படுத்தி, பாலிஷ் செய்து பின்பு அதில் வரைய தொடங்குவார்கள். அதில் முத்து, மினுமினுப்பு கற்கள் அகியவற்றை பொருத்துவார்கள்.
பாத்திரம் கழுவும் போது நகம் உடைந்து போனால் இனி கவலைப்பட தேவையில்லை. அழகான விதவிதமான நகங்களை பொருத்தி கொள்ளலாம் என்பது பெண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இது அவர்களுக்கு புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கை யையும், போரான நகங்களிலிருந்து ஒரு மாறுதலையும் தரும்.
நிறைய இளம் பெண்களிடம் இந்த நெயில் ஆர்ட் மோகம் கூடிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அதனால், எவ்வளவு வேண்டுமானாலும் காசு செலவு செய்து நெயில் ஆர்ட் செய்து கொள்கிறார்கள். நெயில் ஆர்ட் மிகவும் பிரபலமடைந்து வருவதால், இதற்கெனவே தனி பார்லரே தொடங்குமளவிற்கு இதன் மவுசு பெண்கள் மத்தியில் கூடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
-நான்சி மலர்

