
வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்திலும் உள்ள பொருட்களைக் கொண்டே நம் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கான எளிய தீர்வுகள் இதோ;
குப்பைமேனி இலை, மஞ்சள், வேப்பிலை மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் ஊற விடவேண்டும். பின்பு கழுவினால் முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும்.
பச்சைப் பயிறு, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ஆவாரம் பூ, ரோஜா இதழ், குப்பைமேனி இலை ஆகியவற்றை சுத்தம் செய்து காயவைத்து நன்றாக பொடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டால் தினசரி காலை, மதியம், மாலை, இரவு என்று முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும் மினுமினுப்பும் நன்கு தெரியும். குப்பைமேனி சேர்ந்திருப்பதால் எந்த விதமான சரும வியாதிகளும் அண்டாது.
சந்தனத்துடன் வெள்ளரி விதைகளை கலந்து அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரலாம். வாரம் இரண்டு முறை இப்படி செய்து கொண்டால் முகம் ஜொலிக்கும்.
துளசி இலைகளை கசக்கி இரவில் அந்த நீரை முகத்தில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி சுத்தம் செய்து வந்தால் முகம் அழகாக காட்சி தரும்.
ஜாதிக்காயை அரைத்து எடுத்து அத்துடன் சந்தனத்தை கரைத்து கலக்கி இரவில் படுக்குமுன் முகத்தில் தடவி வைத்திருந்து காலையில் முகத்தை கழுவி வந்தால் முகப்பருக்கள் மறைவதுடன் முகம் பளபளப்பாக இருக்கும்.
குளியல் சோப்பை அடிக்கடி மாற்றாமல் இருந்தால் சரும அலர்ஜி ஏற்படாது. வறட்சி ஏற்படாது. இதனாலும் முகம் பொலிவு பெறும்.
தூய சந்தன பொடியை பன்னீருடன் கலந்து பேஸ்ட்போல குழைத்து இதை முகத்தில் தடவி 20 நிமிடம் காயவிட்டு சாதாரண நீரில் முகம் கழுவினால் முகம் நல்ல பளபளப்பாகி புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
கற்றாழை ஜெல்லுடன் தயிரை கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் அழகு பெறும்.
கற்றாழை ஜெல்லுடன் ரோஜா இதழ்களை பொடித்துப் போட்டு அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரை நன்றாக கலந்து முகத்திலும் கழுத்து பகுதியிலும் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம், கழுத்துப் பகுதிகளை கழுவ அந்தப்பகுதிகள் பளிச்சென்று இருக்கும்.
நல்லெண்ணெயில் கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து உடல் முழுவதும் பூசி கால் மணி நேரம் கழித்து பயத்தம்பயறு மாவு தேய்த்து குளிக்கலாம். இது இயற்கையான சன் ஸ்கிரீனாக செயல்பட்டு சருமத்தை பாதுகாப்பதுடன் வியர்வை நாற்றத்தையும் தடுக்கும்.
கடலை மாவு, எலுமிச்சைச்சாறு, பன்னீர் மூன்றையும் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பொலிவாகும்.
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் முட்டையின் வெள்ளைக் கரு, சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் பூசணிக்காயை அரைத்துப் போட்டு, நாட்டு சர்க்கரை, தேன் கலந்து இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்து 25 நிமிடம் இதை காயவிடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ முகம் பளபளவென்று இருக்கும்.
சாதம் வடிக்க அரிசியை ஊற வைத்திருப்போம். அந்த அரிசி தண்ணியை இறுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் இரண்டு மூன்று முறை தேய்த்து அதே தண்ணீரில் முகம் கழுத்து பகுதியை கழுவினால் வெயிலில் அலைந்த கருமை நிறம் மாறிவிடும்.