
கூந்தல் அழகாக வளர இயற்கையான மூலிகை பொருள்களைக்கொண்டு வீட்டிலேயே ஹெர்பல் ஆயில் தயார் செய்து கொள்ளலாம். தலைக்கு பேக் போடலாம். தலை அரிப்பை நீக்கலாம். அதற்கான பொருட்களின் குணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்பதிவில் காண்போம்.
செம்பருத்திப் பூ, பொன்னாங்கண்ணி, நில ஆவாரை, போன்ற பொருட்கள் கூந்தலை கருமையாக வளரச் செய்கின்றன.
வல்லாரை, சோற்றுக்கற்றாழை, நெல்லிக்காய், அருகம்புல், வெந்தயம், மருதாணி போன்ற மூலிகைகள் கூந்தலுக்கு வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சிதரும் தன்மையைக் கொண்டது.
குப்பைமேனி, துளசி, பொடுதலை போன்ற மூலிகைகள் தலையில் உள்ள பொடுகை நீக்கி, தூய்மையாக்கி, கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது.
அரைக்கீரை, கருவேப்பிலை போன்றவைகள் இரும்புச்சத்து நிறைந்தது.
நெல்லிக்காய், கார்போக அரிசி இரண்டும் மிகச்சிறந்த கண்டிஷனிங் தன்மையை கொண்டது. அத்துடன் கூந்தலை பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
முடி உதிர்வதை தடுப்பதற்கு 50 கிராம் வெந்தயம் ஊறவைத்து அரைத்து அயோடின் உப்பு இரண்டு தேக்கரண்டியும், ஆமணக்கு எண்ணெய் நான்கு தேக்கரண்டியும் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடிஉதிர்வது நாளடைவில் குறையும்.
பெரும்பாலும் தலைக்கு பேக் போடுவதற்கு முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொள்ள கூறுவதுண்டு. அந்த வாசம் பிடிக்காதவர்கள் மருதாணி பேக் போடலாம். மருதாணி ஒரு கப், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு சிறிதளவு, தேயிலை நீர் இவற்றை முதல் நாளே கலந்து வைத்துவிட வேண்டும் அடுத்த நாள் இதை பேக் போட்டு ஒருமணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் இளநரை மறையும். கூந்தலுக்கு நிறத்தை, குளிர்ச்சியை கொடுப்பதோடு கூந்தலை ஒரே சீராக வைத்திருக்கும்.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்தது திரிபலா சூரணம். இந்த பொடி எல்லாம் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதில் தேங்காய் பால் அல்லது தண்ணீரில் குழைத்து பூசி ஊறவைத்து குளிக்க முடி பளபளப்பாக இருக்கும். கூந்தலுக்கு நல்ல கண்டிஷனிங் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நிற்கும்.
பேன் தொல்லைகள் நீங்க:
காட்டு சீரகத்தை பாலில் ஊறவைத்து அரைத்து அல்லது தனியாக அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து இரவில் தலையில் பரவலாக தேய்த்து விடவேண்டும். காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
பொடுகு நீங்க:
வசம்புச்சாறு, பொடுதலைச்சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்கவேண்டும். பொடுகை சீக்கிரமாக அகற்றும்.
ஒரு கப் ஆப்பிள் சாற்றுடன் அரைக்கப் தண்ணீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து குளிக்க பொடுகு நீங்கும்.
கூந்தல் முடி வெடிக்காமல் இருக்க: தேங்காய் பால் அரைக்கப், எலுமிச்சை சாறு நாலு தேக்கரண்டி, மற்றும் ஊறவைத்து அரைத்த வெந்தயம் மூன்றையும் கலந்து தேய்த்து ஊறவைத்து தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லையும் நீங்கும். கூந்தல் நுனியும் வெடிக்காமல் இருக்கும்.
தலை அரிப்பு நீங்க:
சிலர் எப்பொழுதும் இரண்டு கைகளாலும் அரிப்பு தாங்காமல் தலையை பிடித்து சொறிவார்கள். அதுபோல் உள்ளவர்கள் உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைசாறு இவற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து குளிக்க தலை அரிப்பு உடனே நீங்கும். தலை அரிப்பு நீங்கினால் முடிஉதிர்வது நிற்கும். முடிஉதிர்வது நின்றால் கூந்தல் நல்ல அடர்த்தியாக வளரும், நல்ல செழிப்பான கூந்தலே "முடி அழகு முக்கால் அழகு" என்று அழகை சிறப்பித்து காட்டும்.