

இன்றைய இளம் பெண்கள் முதல் 40 வயதை தாண்டிய பெண்கள் வரை அத்தனை பேரும் ஆசைப்படுவது அடர்த்தியான கூந்தலை. பெண்கள் வளரும் வயதிலிருந்தே தங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். வேருக்கு நீர் போல ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு இரும்பு சத்து மற்றும் புரதம் உள்ள உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் வெப்பம் அதிகரிப்பு, ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் மாற்றங்கள், தொடர்ந்து மன அழுத்தம், சத்து குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்
கூந்தலின் வேர்க்கால்களை வலிமைப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். இதற்குரிய இயற்கையான வழிகள் குறித்து என்ன என்று பார்க்கலாம்.
முதலில் கூந்தலை அலசுவதற்கு பயன்படுத்தும் ஷாம்பு மிருதுவாக பயன்படுத்தும் கண்டிஷனர் மற்றும் ஹேர் பேக் அனைத்தும் கெமிக்கல் அதிகம் சேர்க்காத பொருட்களாக இருக்கவேண்டும். இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் கூந்தல் நல்ல மாற்றம் தரும்.
முடி வளர்ச்சி அதிகரிக்க வெந்தயம் மற்றும் வெங்காய ஹேர் பேக்
இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து, ஒரு பெரிய வெங்காயம் அல்லது 10 சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் ஜூஸ் எடுத்து இதில் சேர்க்கவும்.
இத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கி இந்த பேஸ்ட்டை கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் பவுடர் அல்லது மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை அலசவும். வாரம் இரண்டு முறை இந்த ஹேர் பேக் பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் அடர்த்தியாக வளர வழி வகை செய்யும்.
கறிவேப்பிலை எண்ணெய் மூலம் முடி வளர்ச்சி தூண்டுவது எப்படி?
சின்ன வெங்காயம், கருவேப்பிலை சமஅளவு எடுத்து இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து, சிறிய உருண்டைகளாக்கி நிழலில் உலர்த்தி உலர்ந்ததும் இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி இந்த எண்ணையை தலைக்கு தடவவும். இது முடி வளர்ச்சியை தூண்டுவதுடன் முடி கொட்டுவதையும் கட்டுப்படுத்தும்.
பெரிய நெல்லிக்காய் 10 கருவேப்பிலை ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் பத்து, அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை இரும்பு வாணலியில் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து காய்ச்சி ஆற வைத்த பின் வடிகட்டி, ½ லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்.
இதில் உலர்ந்த செம்பருத்தி பூக்களை போட்டு வைக்கவும். இந்த எண்ணையை தலைக்கு நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் தூள் அல்லது மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும். இதனால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்பட்டு அடர்த்தியாக வளரும்.
ஒரு கைப்பிடி கருவேப்பிலை, 10 செம்பருத்தி பூக்கள், ஒரு கைப்பிடி செம்பருத்தி இலைகள் மூன்றையும் விழுதாக அரைத்து இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தய பொடி சேர்த்து தேங்காய் எண்ணெயில் மிதமான சூட்டில் கருகாமல் காய்ச்சி இந்த எண்ணெயை வடிகட்டி தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் முடி உதிர்வது நிற்கும்.
வேகமான முடி வளர்ச்சி பெற அரிசி வடித்த நீர் ஸ்பிரே
அரிசி களைந்த தண்ணீர் மற்றும் சின்ன வெங்காயச்சாறு ஆகியவற்றை ஒரு ஸ்பிரே பாட்டிலில் கலந்து இதனை முடி யின் வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்யவும். அரைமணி நேரம் கழித்து மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசவும். வாரம் இரண்டு முறை இந்த ஸ்பிரே பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும்.
ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன் எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து நன்கு கலந்து, இந்த கலவையை தலையில் பூசி நன்கு காயவிடவும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரம் ஒரு முறை இதை செய்தால் முடி உதிர்வது நிற்கும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். இதனை ஆறவைத்து வெங்காய தண்ணீரை முடியின் வேர்கால்களில் ஸ்பிரே செய்யவும். அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசவும். இதுவும் முடி வளர்ச்சிக்கு உதவும். இதில் ஏதாவது ஒன்றை விடாமல் செய்து வந்தால் கூந்தல் உதிர்வு நின்று தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.
இந்த இயற்கை வழிகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், வேர்க்கால்கள் பலமடைந்து முடி உதிர்வு முற்றிலும் நிற்பதை அடுத்த சில வாரங்களிலேயே உணர முடியும். ரசாயன ஷாம்புகளால் இழந்த கூந்தலின் இயற்கையான மென்மையையும், அனைவரும் பொறாமைப்படும் வகையிலான அடர்த்தியான கருங்கூந்தலையும் நீங்கள் மிக எளிதாகப் பெறப்போகிறீர்கள்.