
கடுமையான குளிர் அல்லது பனிக்காலத்தில் தலைமுடி மிகவும் வறண்டு போய், கரடுமுரடாகவும் சொரசொரப்பாக மாறிவிடும். வறண்ட முடி சில சமயங்களில் பொடுகு சேர வழிவகுக்கும். வறண்ட முடிக்கு இயற்கையான ஹேர் மாஸ்க் சிகிச்சைகள் செய்வது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. வாழைப்பழ ஹேர் மாஸ்க்;
இரண்டு பழுத்த வாழைப்பழங்களை எடுத்து அவற்றை நன்றாக மசிக்கவும். இரண்டு தேக்கரண்டி மயோனைஸ் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பேஸ்ட்டை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் விடவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
2. தயிர் ஹேர் மாஸ்க்; ஒரு சிறிய கிண்ணம் நிறைய தயிரை எடுத்து, உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். பின் முடிக்கற்றைகளில் தடவி அரைமணி நேரம் கழித்து அலசவும். தயிர் முடியின் இயற்கை எண்ணெய்களை மீட்டெடுத்து கூந்தலை பட்டுப்போல் ஆக்கும்.
3. கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்; சிறிது கறிவேப்பிலை இலைகளை, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் போடவும். ஆறிய பின் உச்சந்தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து அலசவும்.
4. கற்றாழை ஹேர் மாஸ்க்; வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கற்றாழை ஒரு அதிசய தாவரமாகும். கற்றாழை தலைமுடியில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி முடியை பட்டுப் போல வைக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதன் ஜெல்லை உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு அலசவும்.
5. முட்டை ஹேர் மாஸ்க்; முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து ஹேர் மாஸ்க் செய்யலாம். தலையிலும் முடியிலும் தடவி அரைமணி கழித்து அலசவும்.
இத்தகைய ஹேர் மாஸ்க் சிகிச்சைகளை வாரம் இருமுறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வறண்ட கூந்தலை மாற்றும் உணவுமுறை;
வறண்ட கூந்தலை மாற்றும் திறன் தகுந்த உணவுகளுக்கு உண்டு. காளான்கள், சோயா, தயிர், பால், முட்டை, சால்மன் மீன், ப்ரோக்கோலி, தக்காளி, பீன்ஸ், நெல்லி மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற ஆக்ஸிஜனேற்ற உணவுகள் வறண்ட முடியை மாற்றி ஈரப்பதமாக வைக்கும்.
வறண்ட முடியை தவிர்க்க டிப்ஸ்;
1. தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதைத் தவிர்க்கவும்; ஷாம்புகளை தினமும் பயன்படுத்தினால் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெயை அகற்றி, முடியை உலர வைக்கும்.
2. பேன் காற்றில் உலர்த்துவதைத் தவிர்க்கவும்; தலைமுடியை காற்றில் உலர்த்துவதற்கு பதிலாக ஒரு துண்டில் போர்த்தி விடுங்கள். தலைமுடியை உலர்த்துவதை விட நீண்ட நேரம் தலைமுடியை ஈரமாக வைத்திருப்பது நல்லது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஹேர்ட்ரையரில் உலர்த்தவே கூடாது.
3. குளிர்ந்த நீரில் குளிக்கவும்; சூடான நீர் உச்சந்தலையில் உள்ள எண்ணெய்யை உறிஞ்சி முடியை உலர வைக்கும். ஷாம்பு மற்றும் கண்டிஷனருக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கடைசியாக முடியை அலசவும். உப்பு நீரைத் தவிர்க்கவும்.
4. தொப்பி அணியுங்கள். புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுபாடுகள் தோலில் ஏற்படுத்தும் அதே விளைவை தலைமுடியிலும் ஏற்படுத்தும். இயற்கை எண்ணெய்கள் வெளியேறுவதைத் தடுக்க தலைமுடியை தொப்பி மூலம் பாதுகாக்கவும்.
5. சூடான எண்ணெய் சிகிச்சை; அடிக்கடி ஸ்ட்ரைட்டனிங், கர்லிங், செய்தால் முடியை வறட்சியாக்கி விடும். தேங்காய் எண்ணெயை சூடாக்கி, உச்சந்தலையில் சில துளிகள் வைத்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அது தலைமுடியை வறண்டுபோகாமல் காக்கும்.