

பொதுவாக நாள் முழுவதும் ஓடியோடி வேலை செய்துவிட்டு இரவில் நாம் தூங்கச் செல்லும்போது நமது உடல் முழுமையான ஓய்வு நிலைக்குச் செல்கிறது. ஆனால், அந்த அமைதியான நேரத்தில் நமது சருமம் மட்டும் மிகத் தீவிரமாக ஒரு பெரிய ரிப்பேர் வேலையைத் தொடங்குகிறது.
பகல் நேரத்தில் சூரிய ஒளி, மாசு, கணினி, மொபைல் திரைகளில் இருந்து வரும் வெளிச்சம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யும் மிக முக்கியமான பணியை நமது சருமம் இரவில்தான் செய்கிறது. இதனால்தான் இரவு நேர சரும பராமரிப்பு மிகவும் அவசியமான ஒரு தினசரி பழக்கமாகப் பார்க்கப்படுகிறது.
அறிவியல் பின்னணி!
இரவு நேரத்தில் நமது சருமத்தின் செல்கள் தங்களைத் தாங்களே அதிவேகமாகப் புதுப்பித்துக் கொள்கின்றன. இந்த நேரத்தில் நாம் பூசும் எந்த ஒரு கிரீம், சீரம் மிக எளிதாகச் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும். பகலில் படும் புறஊதாக் கதிர்களால் நமது செல்களில் ஏற்படும் DNA பாதிப்புகள் கூட இரவில் தான் முழுமையாகச் சரிசெய்யப்படுகின்றன.
மேலும் தூங்கும் போது சருமத்தில் உள்ள நீர்ச்சத்து எளிதில் ஆவியாகிவிடும் என்பதால், முகத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை இரவில் கொடுப்பது மிக மிக முக்கியம்.
சரியான பராமரிப்பு முறை!
ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் உள்ளன. நீங்கள் இருபதுகளில் இருப்பவர் என்றால் உங்களின் சருமத்திற்கு அதிக ஈரப்பதம் மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, சருமத்தைப் பாதுகாக்கும் இலகுவான சீரம்களைப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். இதுவே நீங்கள் முப்பது வயதைத் தொடும்போது முகத்தின் இயற்கையான பளபளப்பு லேசாகக் குறையத் தொடங்கும்.
அப்போது முகத்திற்குப் பொலிவைத் தரும் ஹைடிரேட்டிங் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் வரத் தொடங்கும். அவர்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆன்டி-ஏஜிங் கிரீம்களைத் தவறாமல் பயன்படுத்துவது சருமத்தை எப்போதுமே இளமையாக வைத்திருக்கப் பெரிதும் உதவும்.
ஆயுர்வேதம் தரும் இயற்கையான தீர்வுகள்!
நாம் இரவில் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நமது சருமத்தின் இயற்கையான குணப்படுத்தும் தன்மையோடு இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு ஆயுர்வேதத்தில் பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள், குங்குமப்பூ, குங்குமாதி தைலம் போன்ற இயற்கையான மூலிகைகள் மிகப்பெரிய அளவில் உதவி செய்கின்றன. இவற்றைச் சீரமாகவோ அல்லது எண்ணெயாகவோ முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யும்போது அது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு ஒரு தேவதை போன்ற அழகைக் கொடுக்கிறது.
சுத்தமே முக்கியம்!
எவ்வளவு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தினாலும், அதற்கு முன்பு முகத்தை மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். பகல் முழுவதும் முகத்தில் படிந்திருக்கும் தூசு, அழுக்கு, மேக்கப் அனைத்தையும் ஒரு மென்மையான கிளென்சர் கொண்டு முழுமையாகச் சுத்தப்படுத்த வேண்டும். அதன் பிறகுதான் இரவு நேர சீரம் அல்லது கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும்.
இரவு நேர சருமப் பராமரிப்பு உங்களின் சருமத்திற்கு நீங்கள் கொடுக்கும் மிகச் சிறந்த ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சி ஆகும். முறையான சுத்திகரிப்பு, இயற்கையான சீரம், மென்மையான மசாஜ் ஆகிய இந்த எளிய விஷயங்களைத் தொடர்ந்து செய்து வந்தாலே உங்களின் முகம் பொலிவடையும்.
தினமும் காலையில் தூங்கி எழும்போது உங்களின் முகம் எந்த ஒரு குறையுமின்றி தனித்துவமான பிரகாசத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை நீங்கள் கண்ணாடியில் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.