
ஆண்களுக்கு நீண்ட காலமாக வழுக்கை தலை பெரிய துயரமாக உள்ளது. இதற்கு தீர்வாக முடி மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இருந்துள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை முறையும், ஒரு சில நேரங்களில் சிலருக்கு பலன் அளிக்காமல் போகும், சிலருக்கு ஒவ்வாமையை அளிக்கும்.
இந்த சிகிச்சை முறை, செய்து கொள்பவருக்கு, அது கடினமான ஒரு விஷயமாகும். இந்த சிகிச்சையில் தலை எங்கும் நுண்ணிய துளையிடப்பட்டு அதில் உடம்பில் ஓர் இடத்திலிருந்து முடிகளை வேருடன் பிடுங்கி தலையில் நடப்படும். அதன் பின்னர் முடிகள் முளைத்து வளர சில வாரங்கள் வரை ஆகும்.
புதிய சிகிச்சை முறையில் ஸ்டெம் செல்லை பயன்படுத்தி தலையில் முடி வளர வைக்கின்றனர். பொதுவாக முடியின் வேர்களில் உள்ள நுண் குழாய்கள் உடலின் சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதை நிறுத்தும் போது வேர்களில் உள்ள நுண்குழாய்கள் மூடப்பட்டு, முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி, முடி உதிர்தல் ஏற்படுகிறது.
முடி உதிர்தல் அதிகமாகி ஒரு கட்டத்தில் வழுக்கை தலை உண்டாகி விடுகிறது. அதன் பின்னர் இயற்கையாக முடி வளர வைப்பது மிகவும் கடினமான செயலாகும். ஆனால் முடியின் வேர்க்கால்களில் உள்ள நுண்குழாய்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் முடி வளர தொடங்கும்.
சில வேதிப் பொருட்களைக் கொண்ட மருந்துகள் மற்றும் மரபணு திருத்தும் தொழில்நுட்பங்கள் மூலம், ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி நுண் குழாய்களை செயல்படுத்தி, முடியின் வேர்களை வளரத் தூண்டி விட முடியும். இந்த முறை இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது. இன்னும் ஒன்று இரண்டு ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறை மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு இறுதி வடிவம் பெறும்.
முடி உதிரும் போது அதன் வேர்களில் உள்ள நுண் குழாய்கள் தற்காலிக தூக்கத்திற்கு சென்று விடும். அவற்றை எழுப்பி விட்டால் மீண்டும் முடி வளரத் தொடங்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மினாக்சிடில் மற்றும் சில வகை எண்ணெய்கள் முடி உதிர்வதை தடுத்தாலும், நிரந்தரமாக அதற்கு தீர்வாக இருப்பதில்லை.
முடி உதிர்தலை தடுப்பதோடு புதிய முடியின் வளர்ச்சியை தொடங்குவதை நோக்கமாக கொண்டு தான் சோதனைகள் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில் ஸ்டெம்செல் தொழில் நுட்பத்தின் மூலம் வழுக்கை தலையில், அறுவை சிகிச்சைகள் எதுவுமின்றி முடி வளர வைக்க முடியும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முடி வேர்களிலிருந்து இருந்து அறுவடை செய்யப்பட்ட மீசன்கிமல் ஸ்டெம் செல்களில் இருந்து முடி வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர். முடியின் வேர் ஸ்டெம் செல்களை நேரடியாக தலையில் செலுத்தும் முயற்சிகளும் நடந்துள்ளன.
இத்தாலி மற்றும் அல்பேனியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், முடியை வளர வைக்கும் ஸ்டெம் செல்களை உச்சந்தலையில் உள்ள ஒரு இடத்தில் செலுத்தினர். பின்னர் 23 வாரங்களுக்கு தொடர்ச்சியாக கண்காணித்தனர். அதில் அந்த நபருக்கு தலையில் மீண்டும் முடி வளர்ந்துள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. ஆலோசனைக்கு தகுந்த நிபுணரை அணுகவும்)