

நம் வீட்டில் உணவிற்காக பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் அழகு சார்ந்த பண்புகளை கொண்டுள்ளன. வீட்டிலிருந்தே இயற்கையான முறையில் நம்முடைய அழகைப் பேணி காக்க முடியும். அந்த வகையில் தேங்காயை அழகு சாதன பொருளாக பயன்படுத்துவது குறித்து இப்பதிவில் காண்போம்.
* தேங்காய் பாலுடன், கடலை மாவு அல்லது பயத்த மாவு கலந்த கலவையை உடலில் தேய்த்து வாரத்திற்கு இருமுறை குளிப்பதை வழக்கமாக்கி கொண்டால் சருமம் பளபளப்பாகி இளமையாக காட்சி தரும்.
* தேங்காயில் இருக்கும் வழுக்கையுடன் கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை சேர்த்து அரைத்து முகம் மற்றும் உடலில் பூசி கால் மணி நேரம் ஊறவிட்டு குளிப்பதால் முகப்பருக்கள் மறைந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தழும்புகளும் கரும்புள்ளிகளும் மறைவதோடு உடல் வெப்பம் குறையும்.
* கெட்டியான தேங்காய் பால் அரை கப் எடுத்துக் கொண்டு இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவிட்டு கூந்தலை அலச கூந்தல் வளர்வதோடு பளபளப்பாகவும் இருக்கும்.
* தலையில் தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் சீயக்காயுடன் இளநீர் சேர்த்து தலைக்கு குளிப்பதால் கூந்தல் நல்ல ஈரப்பதத்துடன் இருப்பதோடு கூந்தல் நுனி உடைவது குறையும்.
* இரண்டு டீஸ்பூன் தேங்காய் பாலுடன் ஒன்றிரண்டு குங்குமப் பூவை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் நன்கு தடவி விரல்களால் கழுத்திலிருந்து மேல் நோக்கி முகத்துக்கு வாரத்திற்கு மூன்று முறை மசாஜ் செய்ய முகம் பொலிவடையும்.
* இரண்டு டீஸ்பூன் தேங்காய் பால் காய்ச்சாத பசும் பால் இரண்டையும் எடுத்துக்கொண்டு அதனுடன் ஊறவைத்து அரைத்த கசகசா அரை ஸ்பூன் போட்டு ,கடலை மாவு கலந்து பசை போல செய்து முகம் கழுத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தின் இயல்பான நிறம் கிடைத்து முகம் பளிச்சென இருக்கும்.
* அரை ஸ்பூன் கடலை மாவு பயத்த மாவு, கஸ்தூரி மஞ்சள் எடுத்துக் கொண்டு எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து, தேங்காய் பால் நிறைய ஊற்றி பசைபோல கரைத்து டூவீலரில் பயணிக்கும் பெண்கள் வெளியில் சென்று வந்ததும் முகம் கழுத்தில் பேக் போட்டு கால்மணி நேரம் கழித்து கழுவ முகத்தில் கரும்புள்ளிகள் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
* தேங்காய் பாலில் மெல்லிய காட்டன் துணியை நனைத்துக் கொண்டு, அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து ஓய்வெடுக்க அதிக நேரம் மொபைல் மற்றும் கணினி வேலை செய்பவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் கண் சோர்வை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
* தேங்காய் வழுக்கையுடன் வெள்ளரி சாறு சேர்த்து கண்களுக்குள் செல்லாதபடி கண்களை சுற்றி பேக் போடுவதன் மூலம் கருவளையத்தை போகலாம்.
* பெண்கள் வறண்ட சருமம் உள்ளவர்களாக இருந்தால், தேங்காய் பால் குடிப்பதும் சமையலில் தேங்காய் பால் அதிகமாக சேர்ப்பதும் சருமத்தை ஈரப்பதமாக்கி பளபளப்பாக வைத்திருக்க உதவிபுரியும்.
முகத்தில் ஒளிந்திருக்கும் இயற்கை அழகை வீட்டிலேயே கிடைக்கும் தேங்காயைக்கொண்டு மேற்கூறிய முறைகளில் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.