
முகத்தில் எண்ணெய் வடிவது என்பது இன்று பெரும்பாலோர் எதிர்கொள்ளும் பொதுவான அழகு பிரச்னைகளில் ஒன்று. இது முகத்தின் பளபளப்பை குறைத்து, முகப்பரு உள்ளிட்ட பல்வேறு சருமச் சிக்கல்களுக்கு காரணமாகின்றது. ஆனால் இதற்குத் தீர்வுகள் உள்ளன. முதலில், எண்ணெய் வடிவதற்கான காரணங்களைப் பற்றி பார்ப்போம்.
முகத்தில் எண்ணெய் வடிவதற்கான முக்கிய காரணங்கள்:
மரபணு:
உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் எண்ணெய் சருமம் இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஹார்மோன் மாற்றங்கள்
பருவமடைதல், மாதவிடாய் போன்ற காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் எண்ணெய் சுரப்பிகளை தூண்டுவதன் மூலம் முகத்தில் அதிக எண்ணெயை உற்பத்தி செய்யும்.
மன அழுத்தம்:
அதிக மன அழுத்தம் கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்களை அதிகரித்து எண்ணெய் உற்பத்தியை தூண்டும்.
அதிகப்படியான சரும பராமரிப்பு:
முகத்தை அடிக்கடி கழுவுவது, கடுமையான ரசாயனங்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது முகத்தை வறண்ட நிலையில் கொண்டு வந்து, எண்ணெய் சுரப்பிகளை அதிகரிக்க செய்யும்.
தவறான உணவுப் பழக்கம்:
அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவை சிலரிடம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக் காரணமாகலாம்.
எண்ணெய் முகத்திற்கான எளிய டிப்ஸ்:
1. முகத்தைக் கழுவுதல்:
ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலை மற்றும் இரவு நேரங்களில் மென்மையான, எண்ணெய் இல்லாத கிளென்சரால் முகத்தைக் கழுவவும். வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது சருமத்தை வறண்டு போகச் செய்து மேலும் எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
2. டோனர் பயன்படுத்துதல்:
முகத்தைக் கழுவிய பின், ஆல்கஹால் இல்லாத டோனரைப் பயன்படுத்தவும். இது சருமத்தின் பிஹெச்(Ph) அளவை சமநிலைப்படுத்த உதவும்.
3. மாய்ஸ்சரைசர்:
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். ஆனால் எண்ணெய் இல்லாத (oil-free), காமெடோஜெனிக் அல்லாத (non-comedogenic) மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்த உதவும்.
4. சன்ஸ்கிரீன்:
சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எண்ணெய் இல்லாத சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சிறந்தது .
5. மேக்அப்:
எண்ணெய் இல்லாத, மேட் பினிஷ் (matte finish) தரும் மேக்அப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இரவில் தூங்கும் முன் முகத்தை கழுவி மேக்அப்பை முழுவதுமாக அகற்ற மறக்காதீர்கள்.
6. உணவுப் பழக்கம்:
ஆரோக்கியமான உணவை போதுமான அளவில் உட்கொள்ளுங்கள். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உள்ளிட்டவை சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
7. மன அழுத்தத்தைக் குறைத்தல்:
யோகா, தியானம் அல்லது உங்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
8. மருத்துவரை அணுகவும்:
உங்கள் எண்ணெய் சருமப் பிரச்னை மிகவும் தீவிரமாக இருந்தால், உடனடியாக சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த எளிய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், உங்கள் முகத்தில் எண்ணெய் வடிவதை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.