
சில நேரங்களில் சாக்லேட், ஐஸ்கிரீம், பீட்சா, சிப்ஸ் போன்ற சுவையான உணவுகள் சாப்பிடனும் என நம்முள் ஒரு திடீர் ஆசை எழுகிறது. சிலர், உணவு முடிந்தவுடன் இனிப்பைத் தவிர்க்க முடியாமல் உணர்வர். இது இயல்பானதுபோல தெரிந்தாலும், உடல் அல்லது மனதில் சில மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.
இந்த மனநிலை 'ஃபுட் கிரேவிங்' என அழைக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? இதை எப்படி சமாளிக்கலாம்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஃபுட் கிரேவிங் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட உணவைக் கண்டதும், அதைக் கட்டாயம் சாப்பிடணும் போல மனதில் தோன்றும் ஆவல் தான் ஃபுட் கிரேவிங். சில நேரங்களில், அந்த உணவைக் குறித்த எண்ணம் தொடர்ந்து மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஃபுட் கிரேவிங் வர காரணங்கள்:
மன அழுத்தம்:
தினசரி வாழ்க்கையில் வேலைப் பளு, பதற்றம் போன்றவை காரணமாக நம்மிடம் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்திலிருந்து விடுபட சிலர் சாக்லேட், இனிப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிட விரும்புகின்றனர். இவை உடலில் டோபமின் என்ற மகிழ்ச்சியூட்டும் ஹார்மோனை தூண்டுவதே இதற்குக் காரணம்.
தூக்கம் குறைவாக இருப்பது:
தூக்கமின்மை என்பது உடலில் கிரெலின் மற்றும் லெப்டின் ஆகிய இரு முக்கிய ஹார்மோன்களை பாதிக்கிறது. இந்நிலையில், தூக்கம் குறைந்தால், கிரெலின் அதிகரித்து பசியை தூண்டும். இதனால்தான், தூக்கம் குறைவாக இருக்கும் நாள்களில் அதிக கிரேவிங் ஏற்படுகிறது.
சத்துகள் குறைபாடு:
உடலுக்கு தேவையான சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை குறைவாக இருந்தால், உடல் குறிப்பிட்ட உணவுகளை தேடும். உதாரணமாக, மெக்னீசியம் குறைவாக இருந்தால் சாக்லேட்டுக்கான ஆசை அதிகமாகலாம். இவை நம்மை உணவுகளின் மூலம் அந்த சத்துகளை தேட வைக்கின்றன.
தவறான உணவுப் பழக்கங்கள்:
நேரம் தவறி சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, உணவுகளுக்கிடையே அதிக இடைவெளி விடுவது போன்ற பழக்கங்கள் ரத்த சர்க்கரையை குறைக்கச் செய்யும். இதனால் உடல் எடை அதிகரித்து உணவுகளை தேட தொடங்குகிறது. இவை ஃபுட் கிரேவிங்கை அதிகரிக்கச் செய்யும்
நுண்ணுயிரிகள்:
நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் கூட சில நேரங்களில் கிரேவிங்கை தூண்டும் வகையில் செயல்படக்கூடும்.
ஃபுட் கிரேவிங்கை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்:
வேறு செயல்களில் திசை திருப்புதல்:
கிரேவிங் ஏற்படும் தருணத்தில் உடனே உணவை தேடாமல், மனதை வேறு வழியில் திருப்ப முயற்சிக்க வேண்டும். சிறிது நடைப்பயிற்சி, புத்தகம் வாசித்தல், குளிர்ந்த நீர் குடிப்பது போன்றவை உதவியாக இருக்கும்.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடுங்கள்:
தினமும் ஒரு நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவுகளைச் சாப்பிடுங்கள். இடைவேளைகளில் சத்தான பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்யுங்கள்:
தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
போதுமான தூக்கம் பெறுங்கள்:
ஒருவருக்கு தினமும் 7–8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கம் சரியானால், ஹார்மோன்கள் சமநிலையில் இருந்து கிரேவிங்கை குறைக்கும்.
மருத்துவ ஆலோசனை பெறுங்கள்:
அதிகமாக கிரேவிங் இருந்தால், உடலில் சத்துக்களின் குறைபாடா அல்லது ஹார்மோன்கள் பாதிக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
உணவுக்கான ஆசை என்பது இயற்கையானது, ஆனால் அதை கட்டுப்படுத்தும் திறனும் அவசியம். சீரான வாழ்க்கைமுறையும், ஆரோக்கியமான உணவுமுறையும் தான் இதற்கான நிரந்தர தீர்வு என்றே சொல்லலாம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)