உங்களது முடி பார்ப்பதற்கு மந்தமாக, உயிரற்று காணப்படுகிறதா? முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இயற்கையான தீர்வுகள் உள்ளன. வெங்காயம் இருந்தால் போதும் உங்களது முடி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்து விடலாம். வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, உங்களது தலைமுடி ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இந்தப் பதிவில் வெங்காயத்தைப் பயன்படுத்தி எப்படி ஹேர் மாஸ்க் செய்வது எனப் பார்க்கலாம்.
வெங்காய ஹேர் மாஸ்க் செய்யத் தேவையான பொருட்கள்:
1 பெரிய வெங்காயம்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் தேன்
செய்முறை:
வெங்காயத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். இதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நீங்கள் அரைத்த வெங்காயத்தை ஏதேனும் துணி அல்லது வடிகட்டி பயன்படுத்தி, அதன் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக வெங்காய சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் தலைமுடியின் ஈரப்பதத்தை அதிகரிக்க தேனை சேர்க்கலாம். அவ்வளவுதான், இப்போது உங்களது வெங்காய ஹேர் மாஸ்க் பயன்படுத்த தயாராக உள்ளது. இதில் வேறு எதையும் கலக்க வேண்டாம்.
வெங்காய ஹேர் மாஸ்க் ஏன் பயன்படுத்த வேண்டும்?
வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது இது கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. கொலாஜன் என்பது முடி வளர்ச்சிக்கு உதவும் புரதமாகும். மேலும் வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால், அவை சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
இது முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெங்காய ஹேர் மாஸ்க் நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்திவந்தால், மெலிதாக இருக்கும் தலை முடி கனமாகும். முடியின் வேர்க்கால்கள் நன்கு பலப்படும். இதனால் உச்சந்தலை ஆரோக்கியம் மேம்பட்டு, பளபளப்பான கூந்தலை நீங்கள் பெறலாம்.
இந்த ஹேர் மாஸ்கை தடவுவது நல்லதுதான் என்றாலும் உங்களது உச்சந்தலையில் ஏதேனும் ஒவ்வாமை உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். இப்போதுதான் முதல் முறை வெங்காய ஹேர் மாஸ்க் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முதலில் Patch டெஸ்ட் செய்த பிறகு பயன்படுத்தவும்.