

வைட்டமின் ஏ, சி, பி1, பி2, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்த பப்பாளி, சரும ஆரோக்கியத்துக்கும் செரிமானத்துக்கும் சிறந்தது. பழுத்த பப்பாளி, பப்பாளிப்பால், இலை, காய் ஆகியவை முகப்பரு, முகச்சுருக்கம், கட்டி, வீக்கம், மலச்சிக்கல், நரம்பு வலி, ஈரல் வீக்கம் போன்ற பிரச்னைகளை குறைக்க உதவுகின்றன.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்களில் இரண்டாம் இடத்தில் பப்பாளி உள்ளது. பப்பாளி 'பழங்களின் தேவதை' என்பர். பழுத்த பப்பாளியில் வைட்டமின் சி சத்தும் அதிகம் உள்ளது.
இதில் வைட்டமின் பி1, பி2 ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்து, நியாசின் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகளும் உள்ளன.
நம் சருமத்துக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் முகத்தை பளபளவென மென்மையாக வைக்க உதவுகிறது.
1. நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாகப் பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடம் கழித்து சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும்.
2. முகப்பரு உள்ளவர்கள் பப்பாளிக்காயை நறுக்கிய உட்பகுதி துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்த்தால் இது முகப்பருக்களை போக்கி முகச் சுருக்கங்களை நீக்கி முகம் பொலிவாகும்.
3. பப்பாளிப் பாலை வெங்காயச்சாறுடன் சமஅளவு கலந்து வேர்க்குரு, வேன்கட்டி உள்ள இடத்தில் தடவினால் சீக்கிரமே ஆறும்.
4. சருமத்தில் ஏற்படும் கட்டி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு பப்பாளி இலைகளை தண்ணீர் விட்டு மை போல அரைத்து தடவினால் புண் சீக்கிரமே ஆறும்.
5. தினமும் பப்பாளி பழ துண்டுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது.
6. பப்பாளிப்பழ கூழ், அரை டீஸ்பூன் சீரகப்பொடி, தேன் சேர்த்து கலந்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
7. நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி பிரச்னை இருப்பவர்கள் பப்பாளி இலையை வாணலியில் போட்டு வதக்கி, சூட்டோடு துணியில் மூட்டையாக கட்டி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
8. பப்பாளிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி போதுமான உப்பு சேர்த்து ஊறுகாய் போடுவதுபோல வெயிலில் காய வைத்து சாப்பிட ஈரல் வீக்கம் சரியாகும்.
9. பப்பாளிக்காயை கூட்டு, குழம்பில் போட்டு சாப்பிட உடலில் தேவையற்ற கொழுப்பை அகற்றி உடல் ஆரோக்கியம் பெறும்.
10. குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிட தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
11. பப்பாளிப்பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்களின் மேல் தடவி வர புண்கள் விரைவில் ஆறும்.
12. வறண்ட சருமத்துக்கு பப்பாளிப்பழ கூழ், பால் 2 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவாகும்.
13. ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பப்பாளி பழக்கூழுடன் சிறிது ஆரஞ்சு சாறு கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சரியாகும்.
14. பப்பாளிப் பழக்கூழுடன், சந்தனம், தேன், எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்கள் உண்டாவதை தடுக்கும்.
15. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்கள் உண்டாகக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து சருமத்தில் பருக்கள் உண்டாவதை தடுக்கும். சருமத்தை மென்மையாக்கி பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளையும் குறைக்கும்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், விலையுயர்ந்த இரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, உங்கள் வீட்டில் இருக்கும் பப்பாளியைக் கொண்டே பளபளப்பான சருமத்தையும், செரிமானக் கோளாறுகளற்ற ஆரோக்கியமான உடல் நிலையையும் மிக எளிதாகப் பெற முடியும்.