
பொதுவாக முகத்திற்கும் கூந்தலுக்கும் கொடுக்கும் அக்கறையை நாம் பாதங்களுக்கு கொடுக்க மறந்து விடுகிறோம். முகத்தை அழகாக பராமரிக்கும் நாம் பாதங்களை சரியாக பராமரிப்பதில்லை. கறுத்து பொலிவிழந்து காணப்படும் பாதங்களை வீட்டிலேயே எளிய முறையில் அழகு படுத்தலாம். அதைப் பற்றி இப்பதிவில் காணலாம் வாருங்கள்.
பணிச்சுமை ஒருபுறம், வீட்டு வேலைகள் ஒருபுறம் என காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் பெண்களுக்கு தங்களை பராமரிப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது கடினமாக உள்ளது. அப்படியே நேரத்தை ஒதுக்கினாலும் முகத்தையும், தலைமுடியையும் பராமரிக்கும் நாம் பாதங்களையோ, கைகளையோ கண்டுகொள்வதில்லை.
நகங்களை வெட்டுதல்:
முதலில் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஷாம்பூ சேர்த்து சில நிமிடங்கள் கால்களை அதில் வைத்து பிரஷால் தேய்க்க காலில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். பிறகு காலில் உள்ள நகங்களை நெயில் கட்டர் மூலம் வெட்டி விடவும். பிறகு நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் பழைய நெயில் பாலிஷை அகற்றி நகங்களை நன்கு சுத்தம் செய்யவும். நகங்களை விருப்பமான வடிவில் U அல்லது வட்ட வடிவில் ஷேப் செய்யவும்.
புத்துணர்ச்சி பெற மசாஜ்:
ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு அதில் சிறிது உப்பு, எலுமிச்சைசாறு கலந்து அதில் கணுக்கால் வரை மூழ்கும் அளவு பாதங்களை 20 நிமிடங்கள் வைக்கவேண்டும். நீரில் உள்ள உப்பு கால்களில் இருக்கும் அழுக்குகளையும், நுண்ணுயிர்களையும் நீக்கி சருமத்தை மென்மையாக்கும். பிறகு மென்மையான பிரஷ் கொண்டு பாதங்களை சுத்தம் செய்யவும். கால்களை ஈரம் போக ஒரு தூண்டில் துடைத்து கிரீம் சிறிது தடவி மென்மையாக மசாஜ் செய்ய புத்துணர்வு ஏற்படும்.
ஸ்கிரப் செய்வது:
அடுத்ததாக இறந்த செல்களை நீக்கும் முறை. இதற்கு தோல் மற்றும் நகங்கள் மென்மையாக மாறியதும் சிறிது கிரீமை தடவி பிரஷ் கொண்டு நகங்களை சுத்தம் செய்யவும். இதற்கு வீட்டில் இருக்கும் பழைய பிரஷ்களை பயன்படுத்தலாம். குதிகால்களை பியூமிக் கல்லை பயன்படுத்தி மிருதுவாக தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். கால் விரல் இடுக்குகளில் எலுமிச்சை துண்டை கொண்டு தேய்க்கவும். அழுக்குகள் நீங்கி பளிச்சிடும். உலர்ந்த மென்மையான துண்டால் சருமத்தில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து மாய்ஸ்சரைசரை அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
அழகுபடுத்த:
கால் விரல், பாதம் மற்றும் நகங்களை அழகாக பராமரிக்க அழகு நிலையத்திற்குதான் செல்லவேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே அதிக செலவின்றி அழகாக பராமரிக்கலாம். நகங்களை விருப்பமான நெயில் பாலிஷ் கொண்டு அலங்கரிக்கலாம். ஒரு கோட் நெயில்பாலிஷ் போட்டு அது நன்கு காய்ந்ததும் இரண்டாவது முறை செகண்ட் கோட் அப்ளை செய்ய நகங்களில் நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் கலையாமல் இருக்கும்.
பெடிக்யூர் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
பெடிக்யூர் செய்வதால் கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பாதங்கள் வறண்டுபோய் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தாது. பித்த வெடிப்பு, கால் நகங்களில் பாதிப்பு, பூஞ்சை தொற்றுகள் உண்டாகாது. இறந்த செல்களை நீக்குவதால் பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் பளிச்சிடும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர பாதங்கள் கருமையாவதை தடுப்பதுடன், வெடிப்புகள், அழுக்குகள் சேராமல் அழகான மென்மையான பாதங்களைப் பெறமுடியும்.