

நாம் பொதுவாக உதடுகளுக்கு லிப்ஸ்டிக் அல்லது லிப் கிளாஸ் போடுவோம். அது போடும்போது உதட்டில் ஒரு மெழுகு லேயர் இருப்பதை உணரலாம். ஆனால் லிப் டின்ட் என்பது தண்ணீர் அல்லது ஜெல் வடிவில் இருக்கும். இதை போட்ட சில நொடிகளிலேயே உதட்டோடு உதடாக வித்தியாசமே தெரியாமல் ஊறிவிடும். மேக்கப் போட்ட ஒரு பீலிங்கே இருக்காது. அத்துடன் நீண்ட நேரம் அழியாமலும் இருக்கும்.
லிப் டின்ட் சீக்கிரம் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது என்பதால் அதனை தடவிய உடனேயே விரலால் தேய்த்து விடுவது சிறப்பான தோற்றத்திற்கு உதவும்.
இந்த லிப் டின்ட்டை பல வகைகளில் பயன்படுத்தலாம். கண்களுக்கு மேல் ஐ - ஷேடோவாகவும் பயன்படுத்தலாம். கன்னங்களில் சிறிதளவு தடவி விட்டு விரல்களால் தேய்த்தால் இயற்கையான பிளஷ் (Blush) போட்டது போல் கன்னம் மிகவும் அழகாகத் தெரியும். மல்டி பர்ப்பஸ் கொண்ட இந்த லிப் டின்ட் முக அழகை மெருகேற்ற உதவும்.
லிப் டின்ட் போடுவதற்கு முன்பு உதட்டில் உள்ள வறட்சியை போக்குவதற்கு லிப் பாம் போடுவது அவசியம். அடர்த்தியான நிறங்களை விட இளஞ்சிவப்பு, பீச் கலர் போன்ற லிப் பாம்களை பயன்படுத்த உதட்டின் அழகு மேலும் அதிகரிக்கும். இயற்கையாகவே சிவந்த உதடுகளைக் கொண்டது போல் தோற்றமளிக்கும்.
மேக்கப் போட்ட மாதிரியும் இருக்கணும் ஆனா போடாத மாதிரியும் தெரியணும் என்ற தோற்றத்தை தருவதற்கு சரியான தோல் பராமரிப்பு அவசியம். சுத்தமான, ஈரப்பதமான சருமம் இதற்கு மிகவும் முக்கியம். ஈரப்பதமான சருமம் மேக்கப் இல்லாமலே இயற்கையாகவே பொலிவுடன் இருக்க உதவும்.
முழு கவரேஜ் தரும் பவுண்டேஷனுக்கு பதிலாக tinted மாய்ஸ்சரைசர், BB க்ரீம் அல்லது CC கிரீம் பயன்படுத்தலாம். இவை நம் சரும நிறத்தை சமன் செய்யும். ஆனால் மேக்கப் போட்ட உணர்வை தராது.
கருவளையங்கள் அல்லது சிறிய குறைகளை மறைக்க தேவையான இடங்களில் மட்டும் க்ரீம் கன்சீலரை பயன்படுத்தலாம்.
பவுடர் பிளஷுக்கு பதிலாக க்ரீம் பிளஷ் பயன்படுத்தலாம். உதடு மற்றும் கன்னங்களுக்கு டின்ட்டை பயன்படுத்த கன்னங்களுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்.
கண்களுக்கு இயற்கையான தோற்றத்தை கொடுப்பதற்கு, கண் இமைகள் மீது ஒரு லேசான கோடு மஸ்காராவை பயன்படுத்தலாம்.
இது மாதிரியான சின்ன சின்ன நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் நாம் சிறந்த தோற்றத்துடன் விளங்க முடியும். அத்துடன் மேக்கப் போடாத இயற்கையான உணர்வையும் பெறுவதற்கு இம் மாதிரியான உத்திகளை கையாளலாம்.