

முன்பெல்லாம் தினசரி தலைக்கு குளித்தவர்கள் உண்டு. அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளை கூட நீச்சல் அடிக்க வைத்து அதன் மூலம் சிகிச்சை அளித்து சளி பிடிக்காதவாறு காத்தார்கள். அது இயற்கையாக ஓடும் ஆற்றுத்தண்ணீரில் நடக்கும் நிகழ்வு. இதனால் தலைமுடிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை. இப்பொழுது ஒரே இடத்தில் அடைபட்டிருக்கும் நீரில் தினசரி நீச்சல் அடிக்கும் பொழுது தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படுவதுண்டு. அத்துடன் முடி உதிர்வதையும் எப்படி சரி செய்யலாம் என்பதையும் இப்பதிவில் காண்போம்.
மழை நீரில் தலையை அலசினால் கூந்தல் அதிக பளபளப்பாக இருக்கும். நீச்சல் அடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நீச்சலுக்குப் பிறகு ஷாம்பு குளியல் எடுத்தால் தலை சுத்தமாக இருக்கும். இரண்டு டம்ளர் தண்ணீரில் கைப்பிடி அளவு வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி இந்த நீரை அடிக்கடி முகத்தில் கழுவினால் முகத்தில் உள்ள கிருமிகள் அழிவதோடு தோலுக்கும் இது நல்லது.
நீச்சல் அடிக்கும் பழக்கம் உடையவர்கள் இதை செய்வது நல்லது. இதனால் நீச்சல் குளத்தில் லேசாக ஏதாவது தொற்று இருந்தாலும் அது சருமத்தை பாதிக்காது.
அதேபோல் அவசரமாக வெளியில் புறப்படுபவர்கள் தலைக்கு குளிக்க நேரமில்லாமல் எண்ணெய் பிசுக்காக இருக்கும் தலையில் பவுடரை பூசி, அதை டவலால் துடைத்துவிட்டு முடியை எண்ணெய் பசை இல்லாதவாறு வைத்து செல்வார்கள். அதுபோல் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் தலைக்கு நல்ல குளியல் எடுப்பது அவசியம். . அப்பொழுதுதான் தலைமுடி பாதிக்காமல் இருக்கும். தலையிலும் அழுக்கு சேராமல் புத்துணர்ச்சியுடன் தூங்க முடியும்.
இதுபோல அவசரத்திற்கு தலைமுடியை கட்டுபவர்கள் இரவு தூங்கும் பொழுது தயிரை கடைந்து ,அதில் வெந்தயம், துவரம் துவரம் பருப்பை ஊறவிட்டு மறுநாள் காலையில் மிக்சியில் இட்டு வழு வழுப்பாக அரைத்து தலையில் பூசி விரல் நுனியால் தலையையும், மயிர்க் கால்களையும் லேசாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடியை நன்றாக காப்பாற்றலாம்.
இதற்கு சீயக்காய் தேய்க்க வேண்டியது இல்லை. புளித்த தயிரில் வெண்ணெய் பசையும் கண்டீஷனிங் குணமும் இருக்கிறது. வெந்தயம் இதமான குளிர்ச்சி தந்து வேர்க்கால்களை பலப்படுத்தும். துவரம் பருப்பு அழுக்கையும் பிசுபிசுப்பையை எடுத்துவிடும். இதனால் தலையும் முடியும் சுத்தமாகி அதன் வளர்ச்சியைத் தூண்டும். இருந்த போதிலும் அடிக்கடி தலைக்கு பவுடர் பூசுவதை குறைத்துக்கொள்வது அவசியம். அப்பொழுதுதான் பேன், பொடுகுத் தொல்லை போன்றவை தலைக்கு வராமல் தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
சிலருக்கு முடி அதிகமாக உதிரும். அது போன்றவர்கள் விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து சுட வைத்து மயிர் கால்களில் நன்றாகப் படும்படி தடவிவிடவும்.
பின்னர் ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையின் மீது சுற்றி, அந்த சூடு உள்ளே இறங்கும்படி வைக்கவும் .சற்று ஆறியதும் மீண்டும் அதேபோல செய்து சிறிது நேரம் கழித்து தலைக்கு சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளித்தால் முடி உதிராமல் இருக்கும்.
இதுபோல் நீச்சல் குளத்தில் குளிப்பவர்களும் ,முடி உதிர்தல் உள்ளவர்களும் தலைமுடியை பராமரித்தால் தலைமுடி அழகாக வளரும்.