
ஆண்டாள் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞராவார். 12 ஆழ்வார்களில் இவரும் ஒருவர். அரங்கநாதன் மீது கொண்ட காதலால் இவர் இயற்றிய 30 திருப்பாவை பாடல்கள், இன்றும் மார்கழி மாதத்தில் பாடி வழிப்படப்படுகிறது. அரங்கநாதருக்கு அணிவிக்கக்கூடிய மலர்களை, தான் சூடிக் கொடுத்ததால் இவருக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயர் வந்தது. ஆண்டாள் பூமித் தாயின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
ஆண்டாளுக்கு அழகு சேர்ப்பது அவருடைய தனித்துவமான கொண்டை. அதனால் இந்த சிகையலங்காரத்திற்கு 'ஆண்டாள் கொண்டை' என்ற பெயர் வந்தது. இந்த ஆண்டாள் கொண்டையின் பழமையான பாரம்பரிய அழகை தற்போதுள்ள நவீன திருமணங்கள் பறைசாற்றுகின்றன.
திருமணங்களில் ஆண்டாள் கொண்டையை மணப்பெண்கள் அணிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். மணப்பெண்கள் தங்கள் தலையில் இடதுப்பக்கத்தில் கோன் போன்ற ஒரு அணிகலனை அணிந்திருப்பார்கள்.
அதை சுற்றி மலர்களால் அலங்கரித்திருப்பார்கள். இதையே ஆண்டாள் கொண்டை என்று கூறுவார்கள். இதை மணப்பெண்கள் அணிந்திருப்பது அவர்களுக்கு தனித்துவமான அழகைத் தருகிறது. ஆண்டாள் அரங்கநாதனுடன் ஒன்றிணைந்ததை சொல்லும் ஒரு சின்னமாக இது கருதப்படுகிறது. இதை அணிவதன் மூலம் திருமணத்தில் மணப்பெண்ணை ஆண்டாள் போல உருவகப்படுத்துகிறார்கள்.
இந்த அலங்காரம் மணப்பெண்ணை தெய்வீக பெண்ணாக, பாரம்பரிய கலாச்சார தொடர்பை எடுத்து காட்டுகிறது. திருமணத்தில் மணப்பெண்ணை ஆண்டாளாகவும், மணமகனை பெருமாளாகவும் உருவகப்படுத்தி காட்டுகிறது. ஆண்டாள் கொண்டை தங்கம், முத்து போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்பட்ட அணிகலனாகும்.
இந்த ஆண்டாள் கொண்டையை அணிவது புனிதத்தையும், பக்தியையும் வெளிப்படுத்துவதாக கருதுகிறார்கள். இந்த அணிகலன் நெத்திச்சுட்டி போன்ற அணிகலன்களுடன் சேர்த்து மணப்பெண்ணுக்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாட்டியம் ஆடும் பெண்கள் ஆண்டாள் கொண்டையை அணிந்துக்கொண்டு ஆண்டாள் மற்றும் ரங்கநாதரின் காதல் கதையை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
மேலும் பண்டிகையின் போது ஆண்டாள் சிலையை அலங்கரிக்க இதை பயன்படுத்துவதுண்டு. இந்த சிகையலங்காரம் திருமணத்தில் மணமகளுக்கு எளிமையையும், நளினத்தையும் கூட்டுகிறது. இதை ஃபேஷனாக கருதும் சில பெண்கள், தற்போது தங்கள் திருமணத்தில் அணிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் அவரின் திருமணத்தில் ஆண்டாள் கொண்டை அணிந்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.