
நம் வாழ்வில் சிறிய விஷயங்களை கடைபிடிக்கத் தவறுவதால் பல பெரிய சிக்கல்கள், சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறன சில சின்ன விஷயங்களை எப்படிக் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வங்கி அல்லது தபால் அலுவலங்களுக்குச் செல்லும்போது மறக்காமல் ஒரு பேனாவை கொண்டு செல்லுங்கள். அங்கே சென்ற பின்னரே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய நேரிடும்போது பேனா கொண்டு வராதது ஞாபகத்திற்கு வரும். ஐந்து ரூபாய் விஷயத்திற்காக எதற்காக நாம் பிறரிடம் போய் நிற்க வேண்டும். தற்காலத்தில் பேனாவைக் கேட்டால் பலர் நேரிடையாகவே ‘சாரி’ என்று சொல்லி தர மறுக்கிறார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால், உங்களுக்கு அவர்கள் தங்கள் பேனாவை இரவல் கொடுத்து விட்டு நீங்கள் எழுதி முடித்து பேனாவைத் திரும்பத் தரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை அல்லவா?
கோயிலுக்குச் செல்லும்போது மறக்காமல் இரண்டொரு சிறு காகிதத்துண்டுகளைக் கொண்டு செல்லுங்கள். கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை வீட்டிற்குக் கொண்டு வர அதை மடிக்க காகிதத்தைத் தேடி அலைய நேரிடுகிறது.
பேருந்துகளில் பயணம் செய்ய நேரிடும்போது போதிய சில்லறைகளையும் பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுக்களையும் தவறாமல் கொண்டு செல்லுங்கள். தற்காலத்தில் பலர் ஜிபே செய்வதால் சில்லறைத் தட்டுப்பாடு மிகுதியாக இருக்கிறது. கண்டக்டரிடம் நாம் நூறு ரூபாய் இருநூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து விட்டு மீதி சில்லறை வாங்கக் கஷ்டப்படுவதைத் தவிர்க்க நாமே போதிய சில்லறைகளைக் கொண்டு செல்வது நல்லதல்லவா? சில்லறையை வாங்காமல் மறந்து இறங்கிவிட்டால் நஷ்டம் நமக்குத்தானே?
சொந்த காரில் பயணிக்கும்போது லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்ஷுரன்ஸ், ஆதார் கார்டு நகல் முதலானவற்றை ஒரு சிறிய கவரில் போட்டு மறக்காமல் டேஷ்போர்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமான மொபைல் எண்களை ஒரு சிறிய டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக, மொபைல் போன்களில் நாம் சேமிக்கும் எண்கள் சிம் கார்டு மற்றும் போன் மெமரி என இரண்டு இடங்களிலும் சேமிக்கப்படும். எதிர்பாராதவிதமாக போன் தொலைந்து போனால் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான எண்களை இழந்து வருத்தப்பட வேண்டிய தேவை இருக்காது.
யாருக்கும் எக்காரணம் கொண்டும் உத்தரவாதக் கையெழுத்து (Surety Signature) போடாதீர்கள். ‘தெரிந்தவர் கேட்கிறார், பாவம் ஒரே ஒரு கையெழுத்தைத்தானே கேட்கிறார்’ என்று பரிதாபப்பட்டு கையெழுத்தைப் போட்டால் பின்னர் அவர் பணத்தைச் செலுத்தவில்லை என்றால் நீங்கள் அந்த பணம் முழுவதையும் வட்டியோடு செலுத்த வேண்டியிருக்கும். உத்தரவாதக் கையெழுத்தைப் போட்டுவிட்டு பெரும் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் ஏராளம். மிக நெருங்கிய உறவினர் என்றால் அவர் நம்பகமானவர் என்றால் மட்டும் உத்தரவாதக் கையெழுத்தைப் போடலாம்.
கார் அல்லது இரண்டு சக்கர வாகனத்தில் ஐந்து அல்லது இரண்டு லிட்டர் கேனை எப்போதும் வைத்திருங்கள். வழியில் பெட்ரோல் இன்றி நின்று போனால் கேனை எடுத்துச் சென்று பெட்ரோலை வாங்கி வந்து நிரப்பிக் கொள்ளலாம்.
கார் டிக்கியில் ஸ்டெப்னி நல்ல நிலைமையில் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள். மேலும், கார் டயரைக் கழற்றி மாட்டக்கூடிய ஜாக்கி முதலான உபகரணங்களையும் மறக்காமல் டிக்கியில் எப்போதும் வைத்திருங்கள்.
எந்த ஒரு புதிய பொருளை வாங்கினாலும் அதை வாங்கிய தேதி, வாரண்ட்டி எது வரை உள்ளது, பில் எண், வாங்கிய கடையின் பெயர் முதலான விவரங்களை கணினியில் warranty details.xlsx என்ற பெயரில் ஒரு எக்செல் கோப்பை உருவாக்கி அதில் பதிவு செய்யும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். ஒரிஜினல் ரசீது மற்றும் வாரண்ட்டி கார்டை பிரத்யேகமாக ஒரு ஃபைலில் போட்டு உங்கள் அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கிய பொருள் பழுதானால் கணினி கோப்பினைத் திறந்து பழுதான பொருளுக்கு வாரண்ட்டி உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஃபைலில் உள்ள வாரண்ட்டி கார்டை எடுத்துச் சென்று செலவின்றி சுலபமாகப் பழுது பார்த்துக் கொள்ளலாம்.
மேற்கூறிய எல்லாமே சின்ன சின்ன விஷயங்கள்தான். தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தால் மகிழ்ச்சிதான்.