'ரெட் நெயில் கோட்பாடு' - சிவப்பு நெயில் பாலிஷ்க்கு இத்தனை மகிமையா? இது புதுசா இருக்கே!
ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி தன்மைகள் இருக்கும். அவ்வகையில் சிவப்பு நிறம் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சிவப்பு நிற நெயில் பாலிஷ் வைப்பது ஒருவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இது எப்படி நடக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வண்ணங்கள் நம் வாழ்வை வண்ணமயமாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணம் பிடித்திருக்கும். அதற்கு சில காரணங்கள் கூட இருக்கலாம். உடுத்தும் ஆடைகளின் தரம் மட்டுமே சிலருக்கு திருப்தி அளிப்பதில்லை. அவற்றின் நிறமும் பிடித்த ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆடைகள் மட்டுமின்றி நாம் வாங்கும் சில பொருள்களில் கூட வண்ணங்களை முன்நிறுத்துகிறோம். வண்ணங்கள் நம் மனதோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
ரெட் நெயில் கோட்பாடு:
ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் சிவப்பு நிற நெயில் பாலிஷ்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக ரெட் நெயில் கோட்பாடு கூறுகிறது. சிவப்பு ஒரு தைரியமான மற்றும் சக்தி வாய்ந்த நிறமாகும். இந்தக் கோட்பாடு முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றாலும், உளவியல் ரீதியாக நம்பப்படுகிறது. யாராவது ஒருவர் சிவப்பு நிற நெயில் பாலிஷை வைத்திருந்தால், அவர்களின் ஆர்வம் மற்றும் ஆற்றல் இரண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிவப்பு நெயில் பாலிஷை அணிபவர்கள், கூட்டத்தில் கவனிக்கத்தக்க நபராக இருப்பார்கள். ஏனெனில் மற்றவர்களை இந்த சிவப்பு நிறம் வெகு விரைவிலேயே கவர்ந்து விடும். அதிகரித்த பார்வை, அதிக நம்பிக்கை மற்றும் சுயமரியாதைக்கு சிவப்பு நிறம் உளவியல் ரீதியாக வழிவகுக்கிறது. மக்களை வெகுவாக கவர்வதற்கு கூட நிறைய விளம்பரங்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகின்றது.
உங்களை உறுதியாகவும், சவால்களை சமாளிக்கத் தயாராக இருப்பதை வெளிக்காட்டவும் அடர் சிவப்பு நிறம் உதவும். சமூக நிகழ்வுகளுக்குச் செல்லும் போது சிவப்பு நிற நெயில் பாலிஷை அணிந்தால், அது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். இது மற்றவர்கள் பார்வையில் ஒரு ஈர்ப்பையும் ஏற்படுத்தும். தெரிந்தவர்களிடம் தயக்கமின்றி நேசமுடன் பேசவும் இந்த நிறம் உங்களைத் தூண்டும்.
ரெட் நெயில் கோட்பாடு, நம்பிக்கையை அதிகரிக்கின்ற நுட்பங்களுடன் நன்றாகவே வேலை செய்கிறது. சிவப்பு நிற நகங்களுக்கு ஏற்றாற் போல் உடை அணிந்து, உங்கள் தோரணையை கடைபிடித்து வாருங்கள். இது உங்களுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியை அளிக்க வல்லது. நகங்களில் போடப்பட்ட நெயில் பாலிஷில் விரிசல்கள் ஏற்பட்டால், உடனே அதனை நீக்கி விட்டு மீண்டும் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது சிறப்பாக இருக்கும். நம்பிக்கையை அதிகரிக்க ரெட் நெயில் கோட்பாடு மிகவும் எளிமையான வழியாகும். மிகச் சிறந்த தோற்றத்தைப் பிரதிபலிக்க உங்கள் நகங்களை எப்போதும் சுத்தமாகவும், நன்றாக பராமரித்தும் வர வேண்டும். நகங்களை ஆரோக்கியமாகவும், வலுவானதாகவும் வைத்திருப்பது உங்களின் நம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.