நாக்கை நீட்டுங்கள்... நோய்களை கண்டுபிடித்து விடலாம்!

Tongue Color
Tongue Color
Published on

இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இந்நிலையில் நாக்கின் நிறத்தைப் பார்த்தே நமக்கு என்ன பாதிப்பு உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் புதிய ஏஐ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

வியாதிகள் அதிகமாக பரவும் நிலையில், நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறோம். உடலில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிய தற்போது பல தொழில்நுட்பச் சாதனங்கள் வந்துவிட்டன. இருப்பினும் உடல் பரிதோதனைக்குப் பிறகு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நோய்களைக் கண்டறியும் சாதனங்கள் எல்லாம் இனி தேவையிருக்காது போலிருக்கின்றன. ஆம், நாக்கை நீட்டினாலே அதன் நிறத்தைக் கண்டு என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக மருத்துவர்கள் நோயாளிகளின் நாக்கை நீட்டச் சொல்லிப் பார்ப்பது வழக்கம். இதையே அடிப்படையாகக் கொண்டு தற்போது செயற்கை நுண்ணறிவின் மூலம் 98% நோய் பாதிப்பை கண்டுபிடித்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்டியு) ஆகியவை இணைந்து இந்த புதிய இமேஜிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளன. மனிதர்களுடைய நாக்கின் நிறத்தைப் பகுப்பாய்வு செய்தால் பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற பல நோய்களை எளிதாக கண்டறிய முடியும் என பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி அல்-நாஜி கூறியிருக்கிறார்.

இமேஜிங் சிஸ்டத்தில் இருக்கும் கேமரா சுமார் 20செ.மீ. தொலைவில் இருந்து மனித நாக்கைப் படம் பிடித்து அதன் வடிவம், நிறம் மற்றும் தடிமனைப் பகுப்பாய்வு செய்கிறது. இதன் அடிப்படையில் மனிதர்களுக்கு உண்டாகும் ஆஸ்துமா, இரத்த சோகை, வாஸ்குலர் பாதிப்புகள், கல்லீரல் பிரச்சினைகள், பித்தப்பை பாதிப்புகள், நீரிழிவு, கோவிட் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனை முடிவுகள் கிட்டத்தட்ட 98% துல்லியமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஓர் அதிர்ச்சித் தகவல் - பூமியை விட்டு விலகும் நிலா! இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!
Tongue Color

பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு நாக்கின் நிறம் ஊதா நிறத்திலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பக்கவாத நோயுள்ளவர்களுக்கு நாக்கு சிவப்பு நிறத்திலும், இரத்தசோகை இருந்தால் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேலும், ஆழமான சிவப்பு நிறம் கோவிட்டையும், வயலட் நிறம் ஆஸ்துமாவையும் குறிக்கிறது. இப்படி ஒவ்வொரு நோய்க்கும் நமது நாக்கு நிறம் மாறுவதை வைத்தே நோய்களைக் கண்டறிந்து விடுகின்றனர்.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சீன மருத்துவத்தில் நாக்கின் நிறத்தைக் கொண்டு நோய்களை அறியும் முறை இருந்திருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் இந்த ஏஐ கணிணி பகுப்பாய்வு முறையைக் கண்டுபிடித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com