
பொதுவாக வெயிலில் அதிக நேரம் செலவழிப்பதால் நம் கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படுகிறது என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மையில், பெண்களின் நீளமான முடி, சட்டைக்காலர்கள், அதிகப்படியான ஆபரணங்கள் போன்றவை கழுத்து பகுதிகளில் இறுக்கமாக ஒட்டி இருப்பதால் இத்தகைய கருமை ஏற்படக்கூடும். சிலருக்கு ஒவ்வாமை காரணத்தினாலும் கருமை ஏற்படலாம். இதை ஆரம்பத்திலையே கவனித்தால், வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி இதனை நீக்க முடியும். இந்நிலையில், இயற்கையான முறையில் கருமையை நீக்கி சருமத்தை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் குறித்து இங்கே வாசிக்கலாம்.
*காய்ச்சாத பசும் பாலை காட்டன் பஞ்சில் நினைத்து கருமையுள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு மென்மை சேர்க்கும். விரும்பினால் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.
சில நாட்கள் தொடர்ந்து செய்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும். வாரத்திற்கு 2–3 முறை செய்தால் நாள்பட்ட கருமையும் மாறும்.
*அதே போல், முகத்திற்கு படிப்படியாக பேசியல் போடுவது போலவே, கழுத்து பகுதியில் உள்ள கருமையை நீக்கவும் அந்த வகையான நடைமுறைகளை பின்பற்றலாம். இதில் முதலில் சூடான தண்ணீரில் துணியை நனைத்து, சருமத்தை நன்றாக துடைக்க வேண்டும்.
பின்பு, ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு துண்டை வெள்ளை சர்க்கரையில் தொட்டு, கருமை பகுதிகளில் 5 நிமிடங்கள் தேய்க்கவும். இது ஸ்க்ரப்பாக செயல்பட்டு, இறந்த செல்களை அகற்ற உதவும்.
*அடுத்ததாக, முல்தாணி மெட்டி அல்லது கடலை மாவை ரோஸ் வாட்டரில் கலந்து பேக் போடவும். 10 நிமிடங்கள் காய்ந்தபின் சூடான தண்ணீரில் நனைத்த துணியால் துடைத்து எடுத்தால் உடனடியாக நல்ல மாற்றம் தெரியும்.
*மேலும், தேன், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை சர்க்கரையை கலந்து கருமை உள்ள இடங்களில் தடவி 10 நிமிடங்கள் காயவிட்டு கழுவ வேண்டும்.
*ரோஜா இதழ்கள் மற்றும் பசும்பாலை ஒன்றாக அரைத்து, அதை கழுத்தில் தடவி காயவிட்டு கழுவவும். இது சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும். அதற்குப் பிறகு, தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சையை கலந்து, கருமை மீது தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம். இது கிருமிகளை அகற்றி சருமத்தை பளிச்சென்று மாற்றும்.
*மேலும் கூடுதலாக கோதுமை மாவு, ஓட்ஸ் மற்றும் வெள்ளை சர்க்கரையை கலந்து பேக் போட்டு 15 நிமிடங்கள் விட்டால், சருமம் வெண்மை பெறும். கழுத்துடன் கை, கால், முட்டி போன்ற கருமை பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு, வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி, கருமையை மென்மையாக நீக்க முடியும். இதனை தொடர்ந்து பயன்ப்படுத்தி வருவதால் சருமத்தில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். ஒவ்வொரு முறையிலும் சருமத்தை நன்கு சுத்தம் செய்வதும் மிக அவசியம். இந்த இயற்கை முறைகள் சருமத்தை பாதிக்காமல் பாதுகாத்து, கருமையை நீக்க உதவுகிறது.