
ரெட்டினால், வைட்டமின் சி, ஹைலோரானிக், கிளைக்காலஜிக் ஆசிட் போன்ற சீரம்கள் தற்போது அழகு சாதன சந்தைகளை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. அழகு சாதன பொருட்களில் அதிகம் கேள்விப்படும் பெயர்களில் ஒன்றாக ரெட்டினால் உள்ளது. இதில் ரெட்டினால் சீரம் என்பது வைட்டமின் ஏ வின் ஒரு ரெட்டினாய்டு வடிவமாக உள்ளது. இந்த சீரம் சரும பராமரிப்பில் வயதான தன்மையை குறைக்கவும் முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சருமத்தில் இயற்கையாக உற்பத்தியாகவும் எண்ணெயும், இறந்த சரும செல்களும் சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை அடைத்து பருக்களை உண்டாக்குகின்றன. பருக்கள் மட்டுமல்லாது வெள்ளைப் புள்ளிகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. ரெட்டினால் சீரம் புதிய செல் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் நுண்ணிய துளைகள் அடைபடுவதைத் தடுக்கிறது.
இதனால் சருமத்தில் உள்ள வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. ஏற்கனவே உள்ள பருக்கள் உள்ளிட்ட சரும பிரச்னைகளையும் தீர்க்கிறது.
சூரிய ஒளி மற்றும் ஹார்மோன் மாற்றங்களினாலும் சருமத்தில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சூரிய ஒளி சருமத்தின் நிறத்தினை கடுமையாக பாதித்து ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்துகிறது. ரெட்டினோல் இதற்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. செல் உற்பத்தியை அதிகரிப்பதால், பழைய தோல் உரிந்து புதிய தோல் உருவாகிறது. இதனால் சருமத்தின் வெளிப்புற அடுக்கு மென்மையாகி மற்றும் புதிய சரும செல்கள் வேகமாக வளர அனுமதிக்கிறது. இது கருமைகளை நீக்கி பொலிவான சருமத்தினை உண்டாக்குகிறது.
ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையளிக்க, ரெட்டினோலின் சிறிய சதவீதம் போதுமானது. உதாரணத்திற்கு ரெட்டினால் 0.3 மற்றும் 0.5% அளவில் சீரம்களில் கலந்து இருப்பது பாதுகாப்பானதாக இருக்கும். தினமும் ஒருமுறை 10 வாரங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சீரற்ற சரும நிறத்தைக் குறைக்கும்.
சருமத்திற்கு வயதாகும்போது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிவற்றின் உற்பத்தி நின்றுபோகும். இந்த இரண்டு வேதிப் பொருட்கள் சருமத்தினை இறுக்கமாகவும் சுருக்கம் அற்று இருக்கவும் உதவி செய்கின்றன. இவற்றின் உற்பத்தி குறையும் போது சருமம் சுருக்கம் அடைந்து வயதான தோற்றத்திற்கு மாறுகிறது.
ரெட்டினோல் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை ஊக்குவித்து , செல் புதுப்பித்தல் மற்றும் சருமம் சுருக்கம் குறைத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் கோடுகள் மறைகின்றது, இளமையான தோற்றமும் கிடைக்கிறது.
ரெட்டினாலை பயன்படுத்தும் முறை:
முதலில் முகத்தினை சோப்பு போட்டு நன்றாக கழுவி, முகத்தில் தண்ணீர் ஏதும் இல்லாமல் நன்கு துடைத்து விடவேண்டும். பின்னர் சிறிய பட்டாணி அளவில் ரெட்டினால் சிரம் எடுத்து முகத்தில் லேசாக தடவி சில நிமிடங்கள் லேசான மசாஜ் செய்யவும். அதன் பிறகு சிறிதளவு மாய்ஸ்சரை முகம் முழுக்க தடவவும் , பகல் நேரமாக இருந்தால் முகத்தில் சன் ஸ்கிரீனை தடவிக்கொள்ளவும். அதிகம் வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ளவும்.
ரெட்டினோல் சருமத்திற்கு நிறைய பயன் உள்ளது என்றாலும் அனைவரின் சருமத்திற்கும் இது ஏற்றது அல்ல. ஒவ்வாமை கொண்ட ஒரு சிலருக்கு இது சர்வ பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும். அதனால், சிறந்த தோல் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு பரிந்துரையின் பெயரில் ரெட்டினோலை பயன்படுத்தவும்.