வெந்தயத்தை இப்படி ஊற வச்சா முடி கொட்டுவது நிக்கும்! அரிசி கஞ்சி ஹேர் மாஸ்க் ரகசியம்!

கஞ்சியில் ஊறவைத்த வெந்தயத்தால் கிடைக்கும் இரட்டிப்பு நன்மைகள்!
ஹேர் மாஸ்க்
ஹேர் மாஸ்க்Gemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

புளித்த அரிசி கஞ்சி, வெந்தயம் மற்றும் கற்றாழை ஆகிய மூன்றும் இணைந்த இந்த ஹேர் மாஸ்க் உச்சந்தலை வறட்சி, பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாகும். இவற்றுடன் கருவேப்பிலை, செம்பருத்தியை சேர்த்து கூடுதல் அழகை பெறலாம். அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

புளித்த அரிசி கஞ்சி: 1 கப் (உப்பு சேர்க்காமல் வடித்த கஞ்சியை 12–24 மணி நேரம் புளிக்க வைத்தது)

வெந்தயம்: 2 முதல் 3 தேக்கரண்டி

கற்றாழை : 3 தேக்கரண்டி சுத்தமான கற்றாழை ஜெல்.

தயாரிக்கும் முறை:

முந்தைய நாள் இரவே வெந்தயத்தைச் சுத்தமான புளித்த அரிசி கஞ்சியிலேயே ஊற வைக்கவும். இப்படி கஞ்சியில் ஊற வைத்தால் சத்துக்கள் இரட்டிப்பாகும்.

கற்றாழை மடலின் ஓரங்களில் உள்ள முட்களை நீக்கி, மேல் தோலைச் சீவி உள்ளே இருக்கும் வெள்ளை நிற ஜெல்லை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும். அதிலுள்ள மஞ்சள் நிறப் பால் (Aloin) முழுமையாகப் போக 2 முறை தண்ணீரில் நன்கு அலசவும்.

மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், சுத்தம் செய்த கற்றாழை ஜெல் மற்றும் தேவையான அளவு புளித்த அரிசி கஞ்சியைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் வெண்ணெய் போன்ற மென்மையான பசையாக (Smooth Paste) அரைத்துக் கொள்ளவும்.

இதில் உள்ள வெந்தயத் துகள்கள் முடியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டி மூலம் வடிகட்டிப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. குறைந்த தண்ணீரீலேயே முடியை அலசி விடலாம்.

பயன்படுத்தும் முறை:

மாஸ்க் போடுவதற்கு முன்பு முடியில் உள்ள சிக்குகளை மென்மையாக எடுத்துக் கொள்ளவும். உச்சந்தலையில் அதிக எண்ணெய் பிசுக்கு இல்லாமல் வைத்துக்கொண்டு தயாரித்த பசையை விரல் நுனிகளால் உச்சந்தலையின் வேர்க்கால்களில் (Scalp) நன்கு படுமாறு தடவி, பின்னர் முடியின் நுனி வரை தடவவும்.

ஹேர் மாஸ்க்
ஹேர் மாஸ்க்Gemini image

தலையில் தடவிய பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, மாஸ்க் முழுவதுமாகக் காய்ந்து இறுகுவதற்கு முன்பே கழுவிவிட்டால் அலசுவது எளிது.

முதலில் சாதாரண குளிர்ந்த நீரில் முடியை நன்கு அலசி, மாஸ்க் முழுவதையும் வெளியேற்றவும். தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவு மைல்டு ஷாம்பு (Mild Shampoo) பயன்படுத்தி அலசலாம்.

கிடைக்கும் முக்கியப் பயன்கள்:

வெந்தயம்: இதில் உள்ள லெசித்தின் (Lecithin) மற்றும் புரதம் முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தும்.

கற்றாழை: உச்சந்தலை அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைத்து, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படும்.

புளித்த கஞ்சி: இதில் உள்ள இனோசிட்டால் (Inositol) மற்றும் அமினோ அமிலங்கள் முடியை மென்மையாக்கி, இயற்கையான பளபளப்பைத் தரும்.

பயன்படுத்தும் அளவு: வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனைப் பயன்படுத்தலாம். சைனஸ் அல்லது அதிகக் குளிர்ச்சி உடல்வாகு உள்ளவர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்க வேண்டாம்.

அரிசி கஞ்சி, வெந்தயம் மற்றும் கற்றாழை கலந்த ஹேர் மாஸ்க்குடன் செம்பருத்தி அல்லது கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கும் போது, அதன் மருத்துவக் குணங்கள் பல மடங்காக அதிகரித்து முடிக்குக் கூடுதல் ஊட்டச்சத்தைத் தருகின்றன.

செம்பருத்தியோடு பயன்படுத்தும் ஹேர்மாஸ்க் முறை:

தலைமுடி அதிக வறட்சியுடன், கரடுமுரடாக இருந்தால் செம்பருத்தியைச் சேர்ப்பது நல்ல பலன் தரும். ஆதலால், 5 முதல் 6 செம்பருத்திப் பூக்கள் அல்லது கைப்பிடி இலைகள் எடுத்து, வெந்தயம் மற்றும் கற்றாழை, அரிசி கஞ்சியுடன் சேர்த்து நேரடியாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஹேர் மாஸ்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

செம்பருத்தி சேர்ப்பதால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்:

செம்பருத்தியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி முடியின் வேர்க்கால்களுக்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, முடி கொட்டுதலைத் தீவிரமாகக் கட்டுப்படுத்துகின்றன.

இயற்கையான கண்டிஷனர்:

இதில் உள்ள அதிகப்படியான கொழகொழப்புத் தன்மை (Mucilage) முடியை மிருதுவாகவும் பட்டுப்போலவும் மாற்றுகிறது. வறண்ட மற்றும் சுருள் முடி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனர்.

இளநரையைத் தடுத்தல்:

செம்பருத்தியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முடியின் இயற்கையான நிறத்தைக் காத்து, இளநரை ஏற்படுவதைத் தாமதப்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
உங்கள் தாத்தாவிற்கு வழுக்கை இருந்ததா? அப்போ உடனே இதை படிங்க!
ஹேர் மாஸ்க்

கறிவேப்பிலை சேர்ப்பதால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்:

பயன்படுத்தும் முறை:

தலைமுடி அதிகமாக உதிர்கிறது, அடர்த்தி குறைகிறது மற்றும் பொடுகுத் தொல்லை அதிகமாக உள்ளது என்றால் கறிவேப்பிலையைச் சேர்ப்பது மிகச் சிறந்தது. ஒரு கைப்பிடி பிரெஷ்ஷான கறிவேப்பிலையை கற்றாழை, வெந்தயம் மற்றும் புளித்த அரிசி கஞ்சியுடன் சேர்த்து நைசாக அரைத்து மாஸ்க் போட்டு 20 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும்.

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, பீட்டா-கரோட்டின் மற்றும் புரதங்கள் நிறைந்திருப்பதால் இது தலைமுடிக்கு ஒரு டானிக் போலச் செயல்படுகிறது.

முடி வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல்:

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் செயலில் உள்ள மூலக்கூறுகள் சேதமடைந்த வேர்க்கால்களைப் பழுதுபார்த்து, புதிய முடிகள் வேகமாக வளர உதவுகின்றன.

நரை முடி மற்றும் வேர் பலவீனம்:

முடியின் வேர்களை உள்சக்தியோடு பலப்படுத்தி, முடியின் அடர்த்தியை (Hair Density) அதிகரிக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும்போது முடி கருமையாகவும் ஆரோக்கியமாகவும் மாற உதவும்.

இதையும் படியுங்கள்:
முடி வளர யூட்யூப் வைத்தியம் பார்க்காதீங்க… இந்த 1 ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!
ஹேர் மாஸ்க்

உச்சந்தலைத் தூய்மை:

கறிவேப்பிலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் மழைக்காலத்தில் உண்டாகும் பொடுகு மற்றும் உச்சந்தலைத் தொற்றுகளை அண்டவிடாமல் தடுக்கின்றன. ஆதலால் இந்த ஹேர் மாஸ்க்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் தலைமுடி நன்கு வளரவும், தலையில் உள்ள பொடுகு நீங்கவும் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி முடி அழகை காக்கலாம்.

இதைப் படித்து இந்த ஹேர் மாஸ்க்களை பயன்படுத்தி மழைக்காலத்தில் தலையில் உண்டாக்கும் பொடுகுகளை விரட்டி அடிக்கலாம்.

புளித்த அரிசி கஞ்சியில் வெந்தயத்தை ஊறவைத்து சத்துக்களை இரட்டிப்பாக்கி, முடி உதிர்வை உடனே தடுக்கும் முறையை அறிந்துகொள்ளுங்கள்.