ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலை அடைய பலர் பல்வேறு விதமான வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுகின்றனர். அத்தகைய பிரபலமான நடைமுறைகளில் ஒன்று, பச்சை முட்டையை உச்சந்தலையிலும் முடிக்கும் பயன்படுத்துவதாகும். இதைப் பயன்படுத்துபவர்கள், முட்டை மூலமாக முடிக்கு ஊட்டம் கிடைத்து, முடியின் வேர்கள் வலுவடைவதாகக் கூறுகின்றனர். இருப்பினும் முடி பராமரிப்புக்கு பச்சை முட்டைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பச்சை முட்டையை தலைக்கு தடவுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பாக்டீரியா பாதிப்பு: பச்சை முட்டையில் சால்மோனெல்லா மற்றும் ஈகோலை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம் என அறியப்படுகிறது. இதை நேரடியாக உச்சந்தலையில் பயன்படுத்தும்போது இந்த பாக்டீரியாக்கள் தொற்றுநோயை ஏற்படுத்தி அரிப்பு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற உச்சந்தலை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள், முட்டையை நேரடியாக தலையில் பயன்படுத்த வேண்டாம்.
உணவு மூலம் பரவும் நோய்: பச்சை முட்டையை தலையில் தடவும்போது அவை தவறுதலாக நம் உடலுக்குள் சென்றால், பாக்டீரியாக்களால் நோய் தொற்று அபாயத்தை அதிகரிக்கும். இதனால் குமட்டல், வாந்தி வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் காய்ச்சல் போன்ற உணவு மூலம் பருவம் நோய்கள் ஏற்படலாம்.
மோசமான வாசனை: பச்சை முட்டைகள் ஒரு தனித்துவமான வாசனையைக் கொண்டுள்ளன. எனவே அதை தலையில் தடவி கழுவிய பின்னரும் முடியில் அந்த வாசனை நீடிக்கும். இந்த துர்நாற்றம் வலுவானதாகவும், அவ்வளவு எளிதில் நீக்க முடியாத வகையிலும் இருப்பதால், உங்களுக்கு அருகே வரும் நபர்கள் அசௌகர்யத்தை உணரலாம். இது உங்கள் மனநிலையை மோசமாக பாதிக்கலாம்.
தலையை விட்டு முற்றிலும் நீங்காது: முட்டை பிசுபிசுப்புத் தன்மை கொண்டது என்பதால், என்னதான் நீங்கள் தலைக்கு குளித்தாலும் அது முழுமையாக நீங்காது. அதன் மிச்சங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலில் அப்படியே இருக்கும். இந்த மிச்சங்கள் சுற்றுச்சூழலில் உள்ள மாசுபாடுகளை ஈர்க்கலாம். இது முடி மற்றும் உச்சந்தலை பாதிப்புகள் அதிகரிக்க வழி வகுக்கும்.
புரோட்டின் சமநிலையின்மை: முட்டைகளில் பெரும்பாலும் புரோட்டின் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே பச்சை முட்டைகளை முடியில் தடவினால் அது வலுவடையும் என நம்பப்படுகிறது. இருப்பினும் பச்சை முட்டையில் உள்ள புரதங்கள் முடி தண்டால் திறம்பட உறிஞ்சப்படாமல் இருக்கும்போது, அதற்கான முழு நன்மைகளை நீங்கள் அடைய முடியாது. முடிக்கு அதிகப்படியான புரதம் கிடைத்தால், இழைகளில் உள்ள ஈரப்பதம் மற்றும் இயற்கையான புரதத்தின் சமநிலை சீர்குலையும் வாய்ப்புள்ளது. இது முடி சார்ந்த பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கலாம்.
எனவே பச்சை முட்டைகளை நேரடியாக தலையில் தடவுவதைத் தவிர்க்கவும். முட்டைகளை வேகவைத்து உணவாக நீங்கள் உட்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான புரோட்டின் கிடைக்கும் என்பதால், அது உங்களது முடி வளர்ச்சியை உள்ளிருந்து தூண்டிவிடும். எனவே முட்டையை தலையில் தடவுவதற்கு பதிலாக, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களது தலைமுடி ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவும்.