
எல்லாருமே தங்கள் தலைமுடியின் வளர்ச்சி மீதும், அதன் ஆரோக்கியம் குறித்தும் எப்போதும் கண்காணிப்புடன் இருக்கின்றனர். தலைமுடி உதிர்வைக் கண்டு மிகவும் கவலைப்படுகிறார்கள். தங்கள் தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்றைய எந்திர வாழ்க்கை, மாசுபாடு, மோசமான உணவுப் பழக்கம், மற்றும் மன அழுத்தம் காரணமாக, முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க பல எண்ணெய்களை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். முடி கொட்டாமல் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். தற்போது பரவலாக தலைமுடி உதிர்வுக்கு ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் வெங்காய எண்ணெயை பயன்படுத்துவது பிரபலமான ஒன்றாக உள்ளது.
ரோஸ்மேரி மற்றும் வெங்காயம் இரண்டும் இயற்கையாக கிடைக்கும் பொருள் என்பதால் அதில் தேவையற்ற பக்கவிளைவுகள் குறைவாகவே இருக்கும். இந்த இரண்டு எண்ணெய்களும் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. பொதுவான கேள்வி என்ன என்னவென்றால், இந்த இரண்டு எண்ணெய்களில் எது சிறந்தது? என்பது தான்.
ரோஸ்மேரி எண்ணெய்:
நீண்ட காலமாகப் முடி உதிர்தலைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் உச்சந்தலையில் இருக்கும் பூஞ்சை மற்றும் பொடுகைக் குறைக்க உதவுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், முடி அடர்த்தியாகவும் உறுதியாகவும் வளர்கிறது.
ரோஸ்மேரி எண்ணெய் ஆண்கள் மற்றும் பெண்களில் முடி உதிர்தல் பிரச்சனையை அதிகரிக்கும் DHT ஹார்மோனைத் தடுக்கிறது. இதனால் தலைமுடி உதிர்தல் குறைகிறது.
ரோஸ்மெரியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ரோஸ்மேரி எண்ணெய் முடியின் நுண் குழாய்களை செயல்படுத்துகிறது. இது புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது, அடர்த்தியாக வளரவும் உதவுகிறது.
வெங்காய எண்ணெய்:
வெங்காய எண்ணெய் முடி உதிர்தலைக் குறைத்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக நிரூபணம் ஆகியுள்ளது. இதில் நிறைந்துள்ள கந்தகம் முடி வேர்களை வலுப்படுத்தி புதிய முடி வளர உதவுகிறது.
வெங்காய எண்ணெயில் சல்பர் உள்ளதால், இது கெரட்டின் உற்பத்திக்கு உதவுகிறது. கெரட்டின் என்பது கூந்தலுக்கு அவசியமான ஒரு புரதமாகும். இது முடி வளர்ச்சியை தூண்டவும் முடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் ஆக்குகிறது. இது தலையில் உள்ள பொடுகு, பூஞ்சை தொற்று மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. வெங்காயத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன, அவை இளநரை வராமல் பாதுகாக்கிறது. வெங்காய எண்ணெய் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
ஒப்பீட்டளவில் பார்த்தால்...
ஒருவருக்கு தலைமுடி உதிர்தல் பிரச்சனை மற்றும் மெதுவான வளர்ச்சி என்றால், ரோஸ்மேரி எண்ணெய் அதிக நன்மை உள்ளதாக இருக்கும்.
முடியின் வேர்கள் வலிமையாகவும் முடி அடர்த்தியாகவும் இருக்க விரும்பினால், வெங்காய எண்ணெய் சிறந்தது.
ஒருவருக்கு இரண்டில் எது தேவை என்பது அவரவர் சுய முடிவுகளுக்கு உட்பட்டது. இதில் ஒருவருக்கு குழப்பம் இருந்தால், தாராளமாக இரண்டு எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் இரண்டின் நன்மையும் ஒரு சேரக் கிடைக்கும். தலைமுடி உதிர்வில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.