
தற்போது பெண்கள், ஆண்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் தலைமுடி குறித்த கவலைகளும் ஆலோசனைகளும் அதிகமா வருகிறது. அதிக முடி இருப்பவர்களுக்கு அதை பராமரிக்க வேண்டுமே என்ற கவலை, குறைவான முடி கொண்டவர்களுக்கு தங்களுக்கு நீண்ட கூந்தல் இல்லையே என்ற கவலை, ஆண்களுக்கோ வெகு சீக்கிரம் வழுக்கை விழுந்து விடுகிறது எனும் பிரச்னை.
இப்படி தலையாய பிரச்னையான முடி பராமரிப்புக்கு பாரம்பரிய முறையான எண்ணெய் தடவுவது சரியா? அல்லது நவீன முறையான சீரம் போடுவது நல்லதா எனும் சந்தேகம் நிலவி வருகிறது. இதோ சீரம் vs எண்ணெய் குறித்து இங்கு சில தகவல்கள்.
நிதானமாக அன்று தினம் தலைமுடிக்கு எண்ணெய் தடவி சிக்குகளை எடுத்து படிய வாரி பின்னல் போடுவதும் வாரம் ஒரு முறை சீயக்காய் தேய்த்து தலைக்கு தண்ணீர் ஊற்றுவது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருந்தது.
தற்போதைய அவசர உலகுக்கேற்றவாறு நவீன அழகு சாதனங்களில் முடிக்கான சீரம்கள் எண்ணெய்களின் இடத்தைப் பிடித்துவிட்டது.
திரவ வடிவ முடி பராமரிப்பு தயாரிப்பான சீரம் என்பது சிலிகான் அடிப்படையிலான தயாரிப்பு ஆகும். இது தலைமுடியின் மேற்பரப்பில் ஊடுருவி மெல்லிய அடுக்கை உருவாக்குவதன் மூலம் ஈரப்பதத்தை தக்கவைத்து கூந்தலை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுவதுடன் கூந்தல் அழகை மேம்படுத்த உதவுகிறது.
சீரம்
சீரம்களின் இலகுவான மென்மைத்தன்மை தினம் தடவுவதை எளிதாகவும் முடியில் உடனே பரவ ஏற்றதாகவும் இருக்கிறது. பல சீரம்களில் பயோட்டின், கெரட்டின் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டமளிக்கும் பொருட்கள் உள்ளன, அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மேலும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் எனப்படுகிறது.
குறிப்பாக முடியை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கூந்தல் அழகுக்கலை நிபுணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சீரம். அதுமட்டுமின்றி கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் இளம் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
எண்ணெய்கள்
எண்ணெய்கள் முடி மற்றும் முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து உச்சந்தலையை குளிர்ச்சியாக மாற்றி ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களால் ஆன பல எண்ணெய்கள், முடி வளர்ச்சிக்கு பயனளிக்கும் இயற்கை பொருட்கள் நிறைந்தவையாக பயனளிக்கிறது.
குறிப்பாக எண்ணெய்கள் முடி வேர்களில் ஆழமாக ஊடுருவி தொற்று போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. முடி வறட்சியால் உடையாமல் பாதுகாக்கும் கவசமாகிறது எண்ணெய்கள். முடி உதிர்தலைக் குறைக்கவும், பொடுகை நீக்கவும் மற்றும் நிறம் மங்காமல் இருக்கவும் உதவும். வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் இயற்கையை விரும்புவோர் எண்ணெய்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சீரம் மற்றும் எண்ணெய் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது நமது முடியின் வகையைப் பொறுத்தது. வறண்ட அல்லது பொலிவற்ற முடி இருந்தால், எண்ணெய் அதிக நன்மை பயக்கும். எண்ணெய் பசையுள்ள முடியாக இருந்தால், சீரம் சிறந்த தேர்வாக இருக்கலாம். அதேபோல் சில கலப்படமிக்க எண்ணெய்களால் உருவாகும் பொடுகு அல்லது அரிப்பு போன்ற உச்சந்தலைப் பிரச்னைகள் இருந்தால், பூஞ்சை எதிர்ப்பு அல்லது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட சீரம் உதவியாக இருக்கும்.
ஒரு சிறந்த முடி சிகிச்சை நிபுணர் மூலம் சீரம் மற்றும் எண்ணெய்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு முடி வளர்ச்சிக்கு எந்த தயாரிப்பைப் பயன்படுத்துவது என்பது குறித்தான முடிவை அவர்கள் ஆலோசனையுடன் பயன்படுத்தி நன்மை பெறலாம்.