இப்போதெல்லாம் நம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை. அதேபோல் வெளிப்புறத் தோற்றத்திலும் அழகைக் கூட்ட நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை.
முகம் அழகாகத் தோற்றமளிக்க டோன் அப், ஃபேஸ் பேக் போன்றதெல்லாம் செய்து வருகிறோம். அதற்கு இணையாக, ஹோம் மேக்கராக இருக்கும் பெண்கள் தங்கள் கைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் அவசியமாகிறது. வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து வரும்போது பெண்களின் கைகளும் பாதங்களும், சோப் மற்றும் நீரில் ஊறி அழுக்காகவும் முரட்டுத் தன்மையுடனும் காணப்படும். உடலின் மற்ற பாகங்களின் சருமத்தோடு ஒப்பிடும்போது கைகளின் சருமம் உலர்ந்த நிலையில் முரடாகத் தோற்றமளிக்கும்.
இதற்குத் தீர்வாக வீட்டிலேயே செய்யக்கூடிய மூன்று வகை ஸ்கிரப் மூலம் கைகளின் அழகையும் மிருதுத் தன்மையையும் மீட்டெடுப்பது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஓட்ஸ் மற்றும் தேன்:
சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றக்கூடிய குணமுடைய பொருள் தேன். ஓட்ஸ் மற்றும் தேன். இரண்டுமே இறந்த செல்களை உரித்தெடுப்பதில் திறமையுடன் செயல்பட உதவுபவை. ஓட்ஸ், ஸ்கிரப் செய்ய சிறந்த பொருள். இரண்டு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேனையும் கலந்து பேஸ்ட்டாக்கவும். இந்த ஸ்கிரப்பை கைகளில் இடைவெளியின்றி தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரால் கைகளைக் கழுவிவிடவும்.
2. காபி பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய்:
சருமத்தை டோன் அப் செய்வதிலும் இறந்த செல்களை உரித்தெடுப்பதிலும் சிறந்த முறையில் செயலாற்ற உதவும் பொருள் காபி பவுடர். தேங்காய் எண்ணெய்
சருமப் பொலிவிற்கு உச்சபட்ச நன்மை தரக்கூடிய பொருள். இது சருமத்தின் கடினத்தன்மை மற்றும் வறட்சியை சிறந்த முறையில் நீக்க உதவும். இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து ஸ்கிரப் செய்ய, இரண்டு டேபிள் ஸ்பூன் காபி பவுடருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பின் இந்த கலவையை மாஸ்க்காக கைகளில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். மாஸ்க் காய்ந்தபின் கைகளைக் கழுவி விடவும். இப்போது கைகளில் சிறந்த மாற்றத்தை உணரலாம்.
3. ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை:
சர்க்கரை சாப்பிடுவது சருமத்திற்கு கெடுதல் தரும். ஆனால் அதை ஸ்கிரப்பாக செய்து உபயோகிக்கையில் நற்பலன் கிட்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை கைகளில் முழுமையாக பேக் (pack) பண்ணி மெதுவாக தேய்த்துவிடவும். 15 நிமிடங்கள் கழித்து கைகளைக் கழுவி சுத்தம் செய்து விடவும்.
ஸ்கிரப் உபயோகித்து மசாஜ் செய்யும்போது முரட்டுத்தனமில்லாமல் மெதுவாகச் செய்வது நல்லது.