
பெண்களுக்கு 'முடி அழகு முக்கால் அழகு' என்பது சொலவடை. கூந்தலானது அழகுடன் ஆரோக்கியத்தையும் உணர்த்தும் குணமுடையது. அவற்றைப் பற்றிய அழகு குறிப்புகளை இப்பதிவில் காண்போம்!
சிலரின் கூந்தலைப் பார்த்தால் கருமையாகவும், மழ மழ வென்றும், பளபளப்புடனும் இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் பயபக்தி மிக்கவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது சாஸ்திரம்.
மங்கையரின் கூந்தல் சுருள் சுருளாகவும், கருமையாகவும் அமைந்து இருந்தால் வாழ்க்கையில் மகத்தான ஐஸ்வர்ய விருத்தியும், வசதிகளின் பெருக்கமும், புத்திர பாக்கியமும், பலராலும் போற்றப்படும் புண்ணிய காரியங்களை செய்யும் தர்ம கர்மாதிபதி யோகமும் உண்டாகும் என்கிறது ஜோதிட அமைப்பு.
கூந்தல் இந்திர நீலத்தைப் போன்ற கருநீல நிறம் உடையதாக இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் எல்லாவித சுகபோகங்களையும் சிறப்பாக அனுபவித்து மகிழ்வார்கள். மிகவும் சாமர்த்திய சாலிகளாகவும், சம்பூர்ண வித்வாம்சினிகளாகவும், சமத்துவ குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது கூந்தல் பற்றிய அழகியல் குறிப்பு. ஆனால் இதுபோன்ற அரிதான முடியை காண்பது அதிஷயமே.
கூந்தல், தலையின் முற்பகுதியில் கருநீல வர்ணமாகவும், சுருள்சுருளாகவும் இருந்து நெற்றியில் புரளுமாயின் இத்தகைய பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் விருத்தி அடைவதோடு நற்பெயரும் உண்டாகும் என்று கூந்தல் பற்றிய லட்சண சாஸ்திரம் கூறுகிறது.
சிலரின் கூந்தலை பார்த்தால் மஞ்சள் நிறம் உடையதாக இருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்கு மஞ்சள் காமாலை நோயும், மண்ணீரல் நோயும் உண்டாகக்கூடும் என்று எச்சரிக்கிறது அழகியல் குறிப்பு.
கூந்தல் அமில நிறமாகவும், அடர்த்தியாகவும் ,அமையப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் குறைவற்றிற்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கூந்தல் குட்டையாக இருப்பின், வசதிகள் வாழ்க்கையில் இருக்கும். இவர்கள் நற்குணம் உடையவர்களாகவும், தயாள மனமுடையவர்களாகவும் விளங்குவார்களாம்.
கூந்தல் அடர்த்தியாகவும், விரிந்தும், செம்பட்டையாகவும், இருக்கும் பெண்களுக்கு துடுக்குத்தனமான புத்தியும், குறும்புத்தனமான செயல்களும், நிகரற்ற துணிவும் இயற்கையிலேயே அமைந்திருக்கும் என்கிறது ஜோதிடம்.
தலைமுடியின் நுனிப்பகுதி வெடிக்காமலும், செம்பட்டை ஆகாமலும் இருந்தால் தலைமுடி நன்றாக வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஆதலால் நம் கருங்கூந்தல் அலைபாய சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொண்டு, இரவில் 11 மணியிலிருந்து 12 மணிவரை நன்றாக உறங்கினால் முடி வளர்வதற்கான சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். அதற்கான நேரத்தை கொடுத்து, தலை முடியை அழுக்கு சேராமல் பேன், பொடுகு அண்டாமல் முறையாக பாதுகாத்து வந்தோமானால் முடி செழுமையாக வளரும். இதனால் நம் தலைமுடி அழகு பெறும் என்பது உறுதி.