
அன்றைய நாட்களில் தலைக்கு எண்ணெய் வைத்து ஊறவிட்டு சீயக்காய் தேய்த்து குளித்து வந்தார்கள். குளித்ததும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாம்பிராணி போட்டு காயவைக்கும் பழக்கம் இருந்தது. வேறு ஷாம்பூ, நறுமண ஸ்பிரே இன்றி கூந்தலானது மணமாக இருந்தது.
அதேபோல சில எளிய மணம் தரும் வழிகள்
தலைக்கு எண்ணையோ, ஷாம்போ போட்டு குளித்ததும் நன்கு துவட்டி விட்டு இயற்கையான காற்றில் காயவிடலாம். பின் நறுமண பொடிகளால் தூபம் போட்டு காட்டி கொள்ள கூந்தல் மணக்கும். அதோடு தலைபாரம், சளி தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கும்.
வெட்டிவேர், லவங்கபத்திரி, அகருகட்டை, திருவட்டப்பச்சை தலா-1பங்கு, சாம்பிராணி -5பங்கு சந்தனத்தூள்-10பங்கு என்ற விகிதத்தில் எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு குளித்ததும் தலைக்கு தூபமிட்டு காட்ட நல்ல மணமாக இருக்கும்.
சந்தனத்தூள் 100கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி -75தலா எடுத்துக் கொண்டு பொடியாக்கி குளித்ததும் கூந்தலுக்கு காட்ட கூந்தல் வாசமிகுந்து காணப்படும். கபாலத்திற்கும் நன்மை பயக்கும்.
ரோஜாப்பூ -500கிராம், திப்பிலி கிழங்கு, இலந்தை பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி, ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தாம்பழத்தோல் -50கிராம் தலா எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் பொடித்துக் கொண்டு கஸ்தூரி மஞ்சள் பொடித்து சேர்த்து இதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து கலந்து காயவைக்கவும். இதை பத்திரப்படுத்திக்கொண்டு தலைக்கு குளித்ததும் கூந்தலுக்கு தூபம் போட்டு காட்டி கொள்ள கூந்தல் வியர்வை நாற்றம், பிசுபிசுப்பால் ஏற்படும் வாடை நீங்கி அருமையான மணத்தைக் கொடுத்து நல்ல தூக்கத்தை தரும்.
சந்தனத்தூள்-50கிராம், கிச்சிலிக்கிழங்கு -30கிராம், வெள்ளை குங்கிலியம் -20கிராம், சாம்பிராணி -30கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால்-தலா-10கிராம் எடுத்து நன்றாக பொடி செய்து தலைக்கு தூபமிட வாசனை அருமையாக இருக்கும்.
சந்தனம், இலாமிச்சைவேர், சாம்பிராணி தலா-25கிராம்,கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு ஏலம், இலவங்கம் தலா-15கிராம், அகில் கட்டை -25,கிராம் எடுத்து பொடி செய்து பன்னீர் விட்டு பிசைந்து வெயிலில் காய வைத்து எடுத்துகொள்ள வேண்டும்.
பின் இவற்றை பொடித்து தூபமிட, தலைக்கு குளிப்பதால் ஏற்படும் தலைபாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைமுடி வாடை இன்றி மணமாக இருக்கும்.
இவை யாவும் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். வாங்கி பக்குவமாக காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு உபயோகிக்க தலைமுடி வாசமாக இருப்பதோடு உச்சித்தலை, கழுத்து பிடரி வலி, நீர்க்கோவை யாவும் குணமாகும். நான் அனுபவத்தில் செய்து பலனடைந்து கொண்டிருக்கிறேன்.