
ஒருவர் திறமையாகச் செயல்பட்டு, நல்ல செல்வாக்கைப் பெறுவதைக் பார்த்து நாம் அவரைப் போன்று பெயர் எடுக்க முடியவில்லையே என்றே ஆதங்கத்தில், 'அவர் என்ன சாதனை செய்துவிட்டார்? அந்த வேலை என்னிடம் இருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்துகாட்டுவேன். அவருக்கு என்ன தெரியும்? ஏதோ அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருக்கிறது' என்று அங்கலாய்த்துக் கொண்டு அவருடைய திறமையை மட்டம் தட்டி விடுவதில் சிலருக்கு அலாதியான பிரியம்.
இந்த குணம் கொண்டவர்கள் எதையும் சரியாகச் செய்ய மாட்டார்கள். கடுமையாக உழைத்துத் திறமையாகச் செயல்படத் தகுதியிருந்தும் வாழ்க்கையில் புறக்கணிக்கப்படுவார்கள்.
இதனால் தொழில்வளம் குன்றி, வாழ்க்கைத்தரம் சீரழிந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், பிறர் திறமையை மதிக்க வேண்டும். அவர் மட்டும் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுச் செல்வாக்கைப் பெறுகிறார். அவருடைய திறமைக்கும், நம்முடைய திறமைக்கும் உள்ள வேறுபாடை அறிந்து செயல்பட்டால் நம்மைத் தேடி நான்கு பேர் வருவார்கள் என்று தம்முள் எண்ணி தம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திறமையுடன் கூடிய உழைப்புக்கு என்றுமே வெற்றி உண்டு. மற்றவர்களின் திறமையை மதிக்காமல், தன்னுடைய திறமைக்கு முன்னால் இவரால் என்ன செய்துவிட முடியும் என்கிற ஆணவப் போக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.
தொழிலில் திறமை என்பது மிக முக்கியமாகும். திறமை இல்லாமல் மற்றவர் திறமையைக் குறை கூறுவதில் எந்தப் பலனும் கிடையாது. தன்னுள் மறைந்துள்ள திறமையைக் கண்டு வெளிக்கொணர்ந்து செயலாற்றும் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு பொருளை நல்ல முறையில் தயாரித்து, அதற்கான சன்மானத்தைப் பெற்று இருப்பார். நாம் அந்தப் பொருளைப் பார்த்து அதனைவிட மிகச் சிறப்பாகத் தயாரித்து அதைவிடக் குறைந்த விலைக்குத் தரமாக அளிக்க வேண்டும் என்று தாம் நினைக்க வேண்டும். இதில் நமது திறமையும், உழைப்பும் வெளிப்படும். கை நிறையப் பணமும் சம்பாதிக்க முடியும்.
அதை விடுத்து, பிறருடைய திறமையைக் குறை கூறக்கூடாது. அவருடைய திறமையைப் புகழ்ந்து பேசவேண்டும். அதேசமயம் அதைவிடச் சிறப்பாக நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் திறமையைப் புகழும் போது நம்முடைய மனத்தில் சந்தோஷமும், நம்மீது நல்ல மதிப்பும் ஏற்படுகின்றது.
உணர்ச்சிவசப்பட்டு ஆணவம் கொள்வதால் மனம் சிதறிவிடும். மனம் சிதறாமல் சாந்தமானால் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாத ஆணவப் போக்குடன் நடந்து கொள்பவர் எக்காலத்திலும் வளர்ச்சியின் எல்லைக்குள் காலடி எடுத்துவைக்க இயலாது.
என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம்மிடம் பண்பும். பணிவும் இல்லை என்றால் 'கர்வமே' உழைப்புக்கு எதிரியாகி விடுகின்றது.
பழுத்த மரத்தை நாடிப் பறவைகள் வருவதுபோல பண்பாலும், அன்பாலும் பிறரைக் கவரவேண்டும். ஆணவப் போக்கை அடியோடு அழித்து விட்டு, அன்பின் வழிநடந்து அமைதி பெறுவதுதான் சிறந்த வழியாகும்.