
மழைக் காலத்தோடு சேர்ந்து பனிக்காலமும் தொடங்கி விட்டது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மாத காலங்களுக்கு குளிர் நிலவும். இக்காலகட்டங்களில் முகம் மற்றும் சருமத்தினை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் பனி காலங்களில் சருமம் அதிகமாக வறண்டு போதல், உதடு வெடிப்பு, முகம் கறுத்துப் போதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே குளிர்காலம் தொடங்கி விட்டாலே நம்முடைய முகம் மற்றும் உடலில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குக் காரணம் சருமம் வறண்டு போதலே. சருமம் வறண்டு போவதற்கு 2 காரணங்கள் உண்டு.
காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைவாக இருத்தல்.
நம்முடைய சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு குறைதல்.
மழை மற்றும் பனிக்காலத்தில் நம்முடைய சுற்றுப்புறமும் குளிர்ச்சியாக இருப்பதால் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மிகவும் குறைந்து போகிறது.
பார்ப்பதற்கு சூழல் மிகவும் குளிர்ச்சியாக இருப்பது போன்று இருந்தாலும் அதில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. குளிர்காலங்களில் நம் உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறுவதில்லை. இதன் காரணமாக நம் உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு குறைவதோடு குறைந்த அளவிலான எண்ணெய் பசையே உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. எனவே நம்முடைய சருமத்தின் பிசுபிசுப்பு தன்மை குறைந்து சருமம் வறண்டு போகிறது.
சரும வறட்சியை தடுக்கும் வழிமுறைகள் :
பனிக்காலத்தில் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் நாம் அனைவரும் பொதுவாக குளிப்பதற்கு சுடு தண்ணீரையே அதிகமாகப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் போது மிகவும் சூடான நீரை பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லது.
மேலும் குளிர்காலத்தில் வழக்கமாக பயன்படுத்தும் சோப்புகளை தவிர்த்து கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் அதிக கெமிக்கல் நிறைந்த சோப்புகள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகின்றன.
குளிப்பதற்கு முன் ஆலிவ் ஆயில் சிறிதளவு எடுத்து உடல் முழுவதும் மசாஜ் செய்துவிட்டு 10-15 நிமிடங்கள் கழித்து குளிப்பது சருமத்தின் வறட்சியைத் தடுக்க உதவும்.
விட்டமின் ஈ நிறைந்த பாதாம் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சம அளவு எடுத்து குளிப்பதற்கு முன் மசாஜ் செய்வது மிகவும் நல்லது.
முகத்தில் அதிகமாக வறட்சியை உணர்பவர்கள் பாலாடையை இரவில் முகத்தில் தடவலாம். மேலும் பாலாடையோடு சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து தடவும் போது முகத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதோடு முகத்தில் உள்ள தேவையற்ற கிருமிகளும், இறந்த செல்களும் நீக்கப்படும்.
குளிர்காலங்களில் பெரும்பாலானோருக்கு சரும வறட்சியின் காரணமாக பாத வெடிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு குழைத்து வெடிப்புகளில் தடவி வருவதன் மூலம் வெடிப்புகளை சரி செய்யலாம். * அதிக சரும வறட்சி இருப்பவர்கள் குளித்தவுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து தடவிக் கொள்வது நல்லது.
வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழம் சாறு கலந்து குளிப்பதும் சரும வறட்சியைத் தடுக்க உதவும்.
பெரும்பாலும் குளிர்காலங்களில் நம்மில் பலரும் நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்வதில்லை. இதன் காரணமாக உடலின் இயக்கம் குறைவதோடு வியர்வை வெளியேற்றப்படாததால் எண்ணெய் சுரப்பிகளின் அளவு குறைகிறது. இதனை தடுக்க தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.
குளிர்காலங்களில் சுற்றுப்புறம் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் நாம் அனைவரும் வெதுவெதுப்பான உணவுகளையே அதிகம் சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக அதிகமாக எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களை உட்கொள்ளும் போது சருமம் வறண்டு போவதோடு உடலின் ஈரப்பதமும் குறைகிறது.
குளிர்காலங்களில் அதிகமாக காபி, டீ போன்றவற்றை பருகுவதும் சருமம் வறண்டு போவதற்கு ஒரு காரணம். எனவே வழக்கமாக காபி, டீ பருகுபவர்கள் அதற்கு மாற்றாக மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பழங்களில் அதிகமாக நீர் சத்துக்கள் இருப்பதால் பெரும்பாலும் குளிர் காலங்களில் பழங்களை நாம் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் அதனை தவிர்த்து குளிர்காலங்களில் சப்போட்டா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சருமத்தின் வறட்சியையும் தடுக்க உதவும்.
அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான சுரைக்காய் சௌசௌ, வெள்ளரிக்காய் போன்றவற்றையும் குளிர்காலங்களில் எடுத்துக் கொள்வது நல்லது.
இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் குளிர்காலத்தின் சரும பிரச்சனைகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்!