

அழகாக தெரிவதற்கு சரும ஆரோக்கியம், நேர்த்தியான ஒப்பனை, சரியான உடை மற்றும் தன்னம்பிக்கை போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தலாம். நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன் உடல் வகைக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுப்பதும், முகத்திற்கு ஏற்றவாறு ஒப்பனை செய்து கொள்வதும் நம் தன்னம்பிக்கையை கூட்டுவதுடன் அழகையும் மேம்படுத்த உதவும்.
முக மசாஜ்:
அழகாக தெரிவதற்கு தினமும் சிறிது நேரம் ஜஸ்ட் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். அதற்கு தினமும் சருமத்தை சுத்தப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்து முகத்திற்கு மசாஜ் செய்யலாம். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்து கன்னப்பகுதியில் வட்ட வட்டமாக சுழற்றியும், மற்ற பகுதிகளில் மெதுவாக நீவி விட்டும் முகத்திற்கு மசாஜ் செய்வது முகம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கஉதவும்.
முகத்தை சுத்தப்படுத்துதல்:
நம் சரும வகைக்கு ஏற்ற க்ளென்ஸரைத் தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியம். தினமும் காலையிலும், இரவு தூங்குவதற்கு முன்னரும் இரண்டு முறை க்ளென்சர் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் மற்றும் அதிகப்படியான எண்ணையை அகற்ற முகம் ஜொலிக்கும்.
ஈரப்பதமாக்குதல்:
சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அதற்கு நம் சரும வகைக்கு ஏற்ற சரியான மாய்ஸ்சரைசரை குளித்த பிறகும், முகம் கழுவிய பிறகும் பயன்படுத்தி வர சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
சன்ஸ்கிரீன்:
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இது சரும பாதிப்பு மற்றும் வயதான தோற்றத்தை தடுத்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
புருவ பராமரிப்பு:
அழகாக புருவங்களை வடிவமைப்பது முகத்திற்கு ஒரு சிறந்த தோற்றத்தை கொடுக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு புருவங்களில் மெதுவாக மசாஜ் செய்வது அதன் வளர்ச்சிக்கு உதவும். அழகான புருவ பராமரிப்பிற்கு தினமும் புருவங்களை ஸ்பூலியைக் (spoolie) கொண்டு முடி வளரும் திசையில் சீவி, முகத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு புருவத்தை வடிவமைப்பது புருவங்களின் அழகை மேம்படுத்த உதவும்
பழக்க வழக்கங்கள்:
ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் நம்மை உண்மையிலேயே அழகாக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும். பப்பாளி, கேரட், மீன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சத்துள்ள, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் முக்கியம்.
மனநலம்:
நல்ல தூக்கம் உடலையும் சருமத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். நம் உடல் நலம் மட்டுமின்றி மன நலமும் நம் தோற்றத்தை பிரதிபலிக்கும். மகிழ்ச்சியாக இருப்பதும், தன்னம்பிக்கையுடன் இருப்பதும் நம்மை மேலும் அழகாக காட்டும். அதற்கு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதுடன் நம்மை நாமே நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
உடைகள்:
எப்பொழுதும் சுத்தமான மற்றும் நேர்த்தியான ஆடைகளை அணிவது நம்மை மேலும் மெருகூட்டும். நம் உயரம், எடை மற்றும் சரும நிறத்துக்கு ஏற்ற வண்ணங்களை தேர்ந்தெடுத்து அணிவதும் நம்மை பொலிவுடன் அழகு மிளிர காட்டும். உடைக்கேற்ற அணிகலன்களையும், காலணிகளையும் தேர்வு செய்து அணிவதும் அழகைக்கூட்டும்.