
சருமத்தில் வறட்சி, படர்தாமரை, கரும்புள்ளி, தேமல், சுருக்கம் என்று பல்வேறு விதமான சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சருமத்தை பாதிப்பது உண்டு. அவற்றிற்கு எளிமையாக தீர்வு காணும் வழிமுறைகள் இதோ (Skin care tips):
துளசி, எலுமிச்சைச் சாறு இவற்றை சமஅளவில் எடுத்து சிறிது கற்பூரத்தை கலந்து தேமலின் மீது தடவிவர தேமல் மறையும்.
வெள்ளைப் பூண்டு சாற்றுடன் சமஅளவு ஆலிவ் எண்ணெய் கலந்து தடவி ஊறவைத்து சோப்பு போடாமல் குளிக்க படர்தாமரை மறையும்.
வயது அதிகரிக்கும்போது புரோட்டின் குறைவினால்தான் முகத்தில் சுருக்கம் வருகிறது. அதை சமன் செய்ய முளைகட்டிய தானிய வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதுபோல் செய்தால் சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.
கேரட், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவைகளை பச்சையாக சாப்பிட்டு வர முகத்தில் பளபளப்பு கூடி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கலாம்.
உலர்ந்த மாங்கொட்டையை பொடி செய்து நீரில் குழைத்து முட்டி போன்ற இடங்களில் கருப்பாக இருப்பதுபோல், எந்தெந்த இடங்களில் கருமை இருக்கிறதோ அந்த இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால். கருமை நிறம் மறைந்து சருமம் மினுமினுப்பு அடையும் .
தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து கருமைப்படர்ந்த இடங்களில் பூசி நன்றாக தேய்த்து கழுவினால் சருமம் பள பளபளப்படையும். நாளடைவில் கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் கருமை இருந்த இடம் தெரியாமல் மறையும்.
வெயிலினால் ஏற்படும் கருமைக்கு முள்ளங்கி சாறு, கரும்புச்சாறு இவற்றினை கொண்டு முகம் மற்றும் கைகளில் பூசி கழுவினால் கருமை நீங்கும்.
கரும்படை இருந்தால் அந்த இடத்தில் கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவிவர கரும்படை மாறி சருமம் இயற்கை நிறம் பெறும்.
கேரட் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் சருமத்திற்கு ஊட்டத்தையும் பொலிவையும் கொடுக்கும்.
அஸ்வகந்தா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் சருமத்திற்கு ஊட்டத்தையும் பாதுகாப்பையும் தரும்.
பனிக்காலத்தில் உடலில் சோப் தேய்த்தால் வறட்சியை அதிகப்படுத்தும். ஆதலால் அதை தவிர்த்து கடலை மாவு பாசிப்பயறு மாவு இரட்டையும் சமஅளவு கலந்து அதில் ஆரஞ்சு பழ தோல் காயவைத்ததை பொடியாக்கி கலந்து தண்ணீர்விட்டு கிரீம் போல் உடலில் பூசி குளித்தால் மழைக்காலத்தில் சருமத்திற்கு அழகு கிடைக்கும். மிருது தன்மையும் உருவாகும்.
பன்னீர் கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கைவிரல்களிலும் தேய்த்துக்கொண்டால் சருமம் மிருதுவாகி அழகு பெறும்.
உலர்ந்த சருமத்திற்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் மற்றும் சருமம் பொலிவடையும்.
சருமத்தை ஈரப்பதம் இல்லாமல் கொஞ்சம் உணர்வாக வைத்துக் கொள்ளவேண்டும். கை, கால், விரல்கள் மற்றும் இடுக்குகளில் வெடிப்பு, புண்கள் வராமல் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
புதினா, துளசி இலைகளை இளஞ்சூடான நீரில் போட்டு 15 நிமிடம் அதற்குள் கைகளை வைத்தால் நகங்களில் கிருமிகள் ஒட்டாது. நகச்சுத்தியும் வராது. கைகளும் மிருதுவாகும்.
கொத்தமல்லியும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி பிறகு முகம் கழுவினால் சருமம் மிருதுவாகும் பருக்களும் நீங்கும்.
இதுபோல் எல்லாவிதமான குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு, தேவையான பொழுது தேவையானவற்றை பயன்படுத்தி சருமத்தை பாதுகாக்கலாம்.