
அழகு என்பது உருவ அவமைப்பிலும் தோற்றத்திலும் மட்டுமல்ல. நம் உடலை போர்த்தி இருக்கும் சருமத்திலும் நம் அழகு அடங்கியுள்ளது. சருமம் பட்டுபோன்று மென்மையாக இருந்தால் அழகு மேலும் கூடுதலாகும். ஆனால் வயதாக வயதாக நம் சருமம் பொலிவிழந்து காணப்படும். காரணம், சருமத்தின் உள்ள செல்களின் அமைப்பு. பொலிவற்ற செல்களை நீக்கும் அழகுக்கலையின் ஒரு பகுதிதான் எக்ஸ்ஃபோலியண்ட்(Exfoliant).
இதைப்பற்றிய தகவல்களுடன் இயற்கையான முறைகள் பற்றியும் இங்கு காண்போம்.
எக்ஸ்ஃபோலியண்ட் (Exfoliant) என்றால் என்ன?
எக்ஸ்ஃபோலியண்ட் (Exfoliant) என்பது சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தின் அடியில் உள்ள புதிய செல்களை வெளிக்கொண்டு வந்து, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும் ஒருமுறை அல்லது பொருள் ஆகும். இதனால் சருமம் புத்துணர்ச்சி பெற்று சரும அழகு மேம்படுகிறது.
இவை ஸ்க்ரப்கள் (Scrub) அல்லது நுண்ணிய துகள்கள் மூலம் பிசிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் ஆகவும் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் (AHAs) மற்றும் பீட்டா ஹைட்ராக்ஸி ஆசிட் (BHAs) போன்ற இரசாயனங்களுடன் கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் ஆகவும் இரண்டு முக்கிய வகைகளில் வருகிறது. மேலும் இயற்கையான பழ அமிலங்கள் (Mandelic acid), சாலிசிலிக் அமிலம், மற்றும் பேக்கிங் சோடா போன்ற பல்வேறு வடிவங்களிலும் எக்ஸ்ஃபோலியண்ட் பயன்படுத்தப்படுகிறது.
சில இயற்கை எக்ஸ்ஃபோலியண்ட் செய்முறைகள்:
எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஸ்க்ரப்கள் ஆக சர்க்கரை, பேக்கிங் சோடா, ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றை தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேன் அல்லது தயிர் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தலாம். இவை இறந்த சரும செல்களை அகற்றுவதோடு, இவை சருமத்தை ஈரப்பதமாக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகின்றன.
1/2:கப் சர்க்கரையுடன் 1/4 கப் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை உங்கள் சருமத்தில் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சில துளிகள் நீருடன் கலந்து பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது இறந்த செல் நீக்கி சருமத்தை பொலிவாக்கி pH அளவை சமப்படுத்த உதவும்.
2 டேபிள்ஸ்பூன் ஓட்ஸை 1 டேபிள்ஸ்பூன் பாலுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் இதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக செய்து சருமத்தில் பூசி தேய்த்து கழுவவும். இது சருமத்தை மென்மையாக்கி, எரிச்சலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
சிறிது காபி பொடியுடன் எண்ணெய் சேர்த்து கலக்கி சருமத்தில் ஸ்க்ரப் ஆக பயன்படுத்தவும். இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் மாற்றும்.
பிரவுன் சர்க்கரை ஒரு நல்ல எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப் ஆகும், இது சருமத்தைப் புத்துயிர் பெறவும், இறந்த செல்களை அகற்றுவதுடன் சருமத்தின் சீரான நிறத்தை உருவாக்கவும் உதவுகிறது.
எப்படி எல்லாம் சுத்தம் செய்யலாம்?
எக்ஸ்ஃபோலியண்ட்டைப் பயன்படுத்தி உச்சந்தலையை ஸ்க்ரப் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து, இறந்த செல்கள் நீக்கப்படும்.
பேக்கிங் சோடா, தேன் போன்ற இயற்கை பொருட்களை முகத்தில் எக்ஸ்ஃபோலியண்ட் ஆக பயன்படுத்த முகம் பொலிவுறும்.
முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க சாலிசிலிக் அமிலம் போன்ற மருத்துவ எக்ஸ்ஃபோலியண்ட் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வித சரும முறையும் தகுந்த நிபுணர் ஆலோசனை பெற்று பயன்படுத்துவதே நல்லது. காரணம் சருமம் மென்மையானது மட்டுமல்ல ஒவ்வாமையினால் உடனடியாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.