
சீசனுக்கேற்றவாறு நம் உடல் உறுப்புகள் பாதிக்கப் படுவதுண்டு. நாம் அவற்றை முறையாக பராமரிக்க மழை, குளிர்கால பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
வெயில் காலத்தில் வியர்வையால் சருமம் சதசதப்பாக வியர்க்குருவால் எரிச்சல் ஏற்பட்டு புண், அரிப்பு போன்ற உபாதைகளைத்தரும். மழை, குளிர்காலங்களில் நீர்ச்சத்து குறைந்து சருமம் வறட்சியாகிவிடும். இதனைத் தடுக்க காலை, மாலை நல்ல மாய்ச்சரைசரை உபயோகிக்கலாம்.
தரமான நம் ஸ்கினுக்கேற்ற லோஷனை உபயோகிக்க சருமம் பளபளப்பாக இருக்கும். தேவையான நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைவதால்தான் சருமம் பொலிவை இழக்கிறது.
போதுமான தண்ணீர் குடிக்க சருமம் வறண்டு போகாது. நீர்ச்சத்துள்ள காய்கள், பழங்களை எடுத்துக்கொள்ள சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
ஒரு டீஸ்பூன் பால் பவுடர் ஒரு டீஸ்பூன் கடலைமாவு, ரோஸ் வாட்டர் இவற்றை நன்கு கலந்து பேஸ் பேக்காக போட சருமம் ஈரப்பதத்துடன் ஆரோக்யமாக இருக்கும்.
முட்டை வெள்ளை கருவுடன் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன் பாலாடை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
உடல் மற்றும் சரும வறட்சியை போக்க ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஊறியதும் கழுவி குளித்திட உடலின் சோர்வு நீங்கி ரத்த ஓட்டம் சீராகும். புத்துணர்ச்சி தரும்.
வாசலினை உதடுகளில் தடவிவர உதட்டு வெடிப்பு வராமலும் மிருதுவாகவும் இருக்கும். புரதம், வைட்டமின், தாதுப்பொருட்கள் கலந்த சரிவிகித உணவை உட்கொள்ள எந்த சரும, உடல் பிரச்னைகள் அணுகாது.
சோப் உபயோகிப்பதற்கு பதில் நலுங்கு மாவு, பாடி வாஷ், பேஸ் வாஷ் உபயோகிக்க சருமம் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்யமாக இருக்கும். பாதவெடிப்பு வராமல் இருக்க வெளியில் சென்று வந்ததும் கால்களை நன்றாக கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். ஃபுட் க்ரீம் போட்டு மென்மையாக மசாஜ் செய்தால் கால்வலி இன்றி, பாதவெடிப்பு, எரிச்சல் இன்றி நன்றாக இருக்கும்.