நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய காலம் தொட்டு நகைகளை பொன்னாலும், நவமணிகளாலும் செய்து அணியும் வழக்கம் உள்ளது. கழுத்தில் விதவிதமான, வகை வகையான நகைகள் அணியப் படுகின்றன. அவற்றுள் பிரபலமானவை நெக்லஸ், செயின், தார், சோக்கர், அட்டியல் என்று பல வகைகள் உள்ளன.
கழுத்தைச் சுற்றி அணியப்படும் இது பொதுவாக தங்கம், வைரம், முத்துக்கள், மணிகள் போன்றவற்றால் ஆனவை. நெக்லஸ்கள் பல்வேறு பாணிகள் மற்றும் நீளங்களில் வருகின்றன. நெக்லஸ்களில் பலவிதமான டிசைன்கள் உள்ளன. இதில் பட்டையாக மட்டுமில்லாமல் நடுத்தர அளவிலும் கூட நெக்லஸ்கள் கற்கள் பதித்தோ அல்லது முழுவதும் தங்கத்தால் ஆனதாகவோ கிடைக்கின்றன. நெக்லஸ் என்பது நம் கழுத்தின் அளவுக்கு ஏற்ப அதன் செயின் நீளம் இருப்பது மிகவும் முக்கியம். இப்பொழுதெல்லாம் லேயர் செயின்கள், ஸ்டேட்மென்ட் பெண்டன்ட்கள் மற்றும் சோக்கர் போன்ற ட்ரெண்டுகள் உள்ளன. சரியான செயின் நீளம் நம் தோற்றத்தை அழகாகக்காட்டும்.
கழுத்தில் நெருக்கமாக, இறுக்கமாக பொருந்தக்கூடிய ஒரு நெக்லஸ் வகை இது. இவை மெலிதானதாகவும், நேர்த்தியானதாகவும், அதே சமயம் அகலமாகவும் இருக்கும். சோக்கர்களின் பூர்வீகம் வெஸ்டர்ன் ஆக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் உருமாற்றப்பட்டுள்ளது. அடுக்கு மாடலில் வரும் கற்கள் பதித்த சோக்கர்கள், முத்துக்கள் பதித்த சோக்கர்கள், குந்தன், போல்கி மாடல்கள் போன்றவை ஆடம்பரமான தோற்றத்தைத் தரும்.
ஆரம் என்பது கழுத்தைச் சுற்றி அணியப்படும். இது மாலை வடிவில் இருக்கும். முத்துக்கள், கற்கள் அல்லது பிற அலங்கார பொருட்களால் ஆனது. மார்பு வரை தொங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். முத்துக்களால் செய்யப்பட்ட ஆரம் என்றால் அதனை 'முத்தாரம்' என்றும், வைரக்கற்களால் செய்யப்பட்ட ஆரத்தை 'வைரமணி மாலை' என்றும் கூறுவது வழக்கம். நிகழ்ச்சியின் தன்மையைப் பொறுத்து கனமான அல்லது மெல்லிய ஆரத்தை தேர்ந்தெடுத்து அணியலாம்.
பாரம்பரிய அட்டிகைகள் பெரும்பாலும் பட்டையாக கழுத்தை ஒட்டி வரும். இந்த வகை அட்டிகைகளில் பதக்கங்கள் கற்கள் வைத்தவையாக இருக்கும். பிளெயின் பதக்கங்கள் உள்ள அட்டகைகளும் இருக்கின்றன. பாரம்பரிய அட்டிகைகள் மட்டுமல்லாது இப்பொழுது ஃபேன்சி அட்டிகைகளும் வந்துவிட்டன. அட்டிகைகள் மிகவும் அழகான சின்னச் சின்ன டாலர்களுடன் கூட கிடைக்கின்றது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன் ஃபேன்சியாகவும் உள்ளது.
லாரியட் நெக்லஸ் என்பது ஒரு தனித்துவமான வடிவமைப்பு கொண்டது. இது கழுத்தை சுற்றி சுற்றக்கூடிய நீளமான சங்கிலி, ஒரு பதக்கம் அல்லது வடிவமைப்புடன் காணப்படும். அதாவது ஒரு நீண்ட சங்கிலி அல்லது நாடா போன்ற வடிவத்தில், ஒரு முடிச்சு அல்லது கொக்கி மூலம் இணைக்கப்படாமல் கழுத்தில் தொங்கும் ஒரு வகை நெக்லஸ்.நாகரிகமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை கொடுக்கக்கூடியது. மனிதனை பார்ட்டிகள் திருமணங்கள் போன்ற விசேஷ தினங்களில் அணிய நல்ல லுக் கொடுக்கும்.
தார் நெக்லஸ் என்பது தார் பாலைவனத்தின் அழகையும், அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ்களில் தார் பாலைவனத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒட்டகங்கள், மணல் மேடுகள், மரங்கள் போன்ற வடிவமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றது. தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் பிற உலோகங்களால் செய்யப்படும் இவற்றில் கற்களும், மணிகளும் பதிக்கப்படுகின்றன.
எளிய வடிவமைப்பை கொண்ட அன்றாட பயன்பாட்டிற்கு அணியப்படும் நகை இது. இதில் மணிகள், ரத்ன கற்கள் அல்லது முத்துக்கள் போன்றவை கோர்க்கப்பட்டும், அவை இல்லாமல் எளிமையான தோற்றத்துடனும் கிடைக்கும். இந்த நீளமான சங்கிலிகள் தினப்படி பயன்பாட்டிற்கு அணியப்படுகிறது.
வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணியப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன். கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். சரம் என்பது மாலை. கழுத்தில் அணியக்கூடிய ஒரு வகையான ஆபரணம் இது. பண்டிகை நாட்களில் அணியப்படும் பாரம்பரிய நகையான இவை தங்கம் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்.
பென்டன்ட் என்பது செயினில் மாட்டப்படும் ஒரு சிறிய அலங்கார பொருளாகும். தங்கத்தில் செய்யப்பட்ட பென்டென்ட்கள் மிகவும் பிரபலமானவை. கல்பதித்த பென்டென்ட்கள், வைரக்கற்கள் பதித்த பென்டன்ட்கள் போன்றவையும் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது. செயினுடன் சேர்த்து அணியப்படும் இவை வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. தங்கம் வெள்ளி பிளாட்டினம் போன்ற உலோகங்களில் கிடைக்கிறது.
நகைகள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:
நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, உறுப்புகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.
நகைகள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றது என்று நம்பப்படுகிறது. கழுத்தில் அணியும் நகைகள், உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.