நாம் தினசரி கண்ணாடியில் பார்க்கும் நமது சருமம் அது வெறும் சருமம் மட்டுமல்ல, பல கோடி நுண்ணுயிரிகளின் வாழ்விடம். ஆம் நம் தோலில் பல வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. இது கேட்க கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும், இது நம் உடலின் இயற்கையான நிலைதான்.
ஒரு சதுர சென்டிமீட்டர் தோலில் பல ஆயிரம் முதல் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. இவை நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் வெவ்வேறு வகைகளில் காணப்படுகின்றன. உதாரணமாக நெற்றியில் ‘கியூட்டிபாக்டீரியம்’, அக்குளில் ‘ஸ்டேஃபிளோகோகஸ்’ மற்றும் கால் விரல்களுக்கு இடையில் ‘ப்ரோபியோனி பாக்டீரியம்’ அதிகமாகக் காணப்படும்.
இந்த நுண்ணுயிரிகள் நமக்கு எதிரிகள் அல்ல, நமது நண்பர்கள். அவை நமது தோலை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படுகின்றன. இவை நாம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகின்றன. நம் தோலில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து நம்மை பல நோய்களிலிருந்து காக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி அது வலுவாக இருக்க உதவுகின்றன.
சில பாக்டீரியாக்கள் நம் தோலில் உள்ள எண்ணெயை உண்டு தோலை ஈரப்பதமாக வைத்துக் கொள்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில ரசாயனங்களை இந்த பாக்டீரியாக்கள் உடைத்து அவற்றால் ஏற்படும் தீங்கைக் குறைக்கின்றன.
நம் தோலின் ஒவ்வொரு பகுதிகளும் வெவ்வேறு சூழல் இருப்பதால் அங்கு வாழும் பாக்டீரியாக்களும் வெவ்வேறு வகையாக இருக்கும். உதாரணமாக வறண்ட பகுதிகளில் குறைவான பாக்டீரியாக்கள் வாழும். ஆனால், ஈரப்பதமான பகுதிகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். இப்படி மனிதர்களும் பாக்டீரியாக்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகிறோம். அவை நமக்கு நன்மை செய்கின்றன நாம் அவற்றிற்கு வாழும் இடத்தைக் கொடுக்கிறோம். இதை ஒரு நல்லுறவு என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே, நம் தோலில் வாழும் பாக்டீரியாக்கள் நம்மை பாதுகாக்கும் நண்பர்கள். அவற்றை அழிக்க முயற்சிப்பதற்கு பதிலாக அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டும். ஆன்ட்டி பாக்டீரியா சோப்புகள் பயன்படுத்துவதைக் குறைத்து, இயற்கை சோப்புகளைப் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான உணவை உண்டு, தண்ணீர் அதிகம் குடித்து, நன்றாகத் தூங்குவது, நம்மையும் நம் உடலில் வாழும் நுண்ணுயிரிகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.